வருடத்தில் பாதி நாட்கள் மூடப்பட்டு பாதி நாட்கள் திறக்கப்படும் ஆலயம் எங்கு உள்ளது தெரியுமா?
ருத்ரபிரயாக் மாவட்டம், ருத்ரபிரயாகையில் இருந்து 75 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கேதார்நாத் புனிதத் தலம்.
3,583 மீட்டர்கள் கடல் மட்டத்தில் இருந்து உயரமுள்ள பகுதி இது. மந்தாகினி ஆறு உற்பத்தி ஆகும் சோராபரி பனிப் பகுதியின் அருகே உள்ளது. கைக்கெட்டும் தொலைவில் கார்வால் இமயத்தின் பனி மலைகள் சூழ்ந்திருக்கின்றன. ரிஷிகேஷில் இருந்து 223 கி.மீ. தொலைவில் இருக்கிறது. கட்டடங்கள் மந்தாகினி ஆற்றின் கரை ஓரமாகவே கட்டப்பட்டிருக்கின்றன. கோயிலுக்குப் பின்புறம் 6,940 மீட்டர் கடல் மட்டத்துக்கு மேல் கேதார்நாத் சிகரம் தென்படுகிறது.
கௌரி குண்ட் என்ற இடம் வரை மட்டுமே வாகனங்கள் செல்ல முடியும். அங்கிருந்து 14 கி.மீ. தொலைவில் கேதார்நாத் இருகிறது. மேல்நோக்கிச் சரிவான பாதை பள்ளத்தாக்கை ஒட்டிச் செல்கிறது. ஒரு புறம் மலைகள், மறுபுறம் அதலபாதாளம். அங்கே பொங்கிப் பிரவகித்து ஓடும் மந்தாகினி ஆறு… என அச்சமூட்டும் பயணம் என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். கௌரிகுண்டில் இருந்து குதிரை மூலமும், நடைப் பயணமாகவும், டோலி மூலமும், ஹெலிகாப்டர் மூலமும் அவரவர்கள் வசதிக்குத் தகுந்தபடி பக்தர்கள் கேதார்நாத்துக்கு பயணிக்கின்றனர்.
Kedarnath Temple
சிவபெருமான் பார்வதியை மணந்த இடமான திரிஜுகி நாராயண், உஹிமத், ஜுவாலாமுகி, காளிமத் போன்ற பல்வேறு இடங்களில் உள்ள ஆலயங்கள் இந்த வழி நெடுகிலும் இருக்கின்றன.
சத்ய யுகத்தில் அரசாண்ட மன்னர் கேதாரை சிறப்பிக்கும் விதமாக இந்தப் பகுதி ‘கேதார்நாத்’ என அழைக்கப்படுகிறது. இன்னும் சிலர், புராண காலத்தில் இந்தப் பகுதி ‘கேதார் கண்டம்’ என அழைக்கப்பட்டதாகவும், இங்கு எழுந்தருளி இருக்கும் சிவபெருமான் ‘கேதார்நாத்’ என அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.