தென் கொரியா கடல் எல்லையை நோக்கிவடகொரியா மீண்டும் எறிகணைகள் வீச்சு
தென் கொரியாவுடனான சா்ச்சைக்குரிய கடல் எல்லையையொட்டி, வடகொரியா ஞாயிற்றுக்கிழமையும் எறிகணைகளை வீசியது.
90-க்கும் அதிகமான முறை எறிகணைகள் வீசப்பட்டதாக தென் கொரியா குற்றஞ்சாட்டியது.
தென் கொரியாவின் மேற்கு கடல் எல்லையையொட்டி, சுமாா் 200-க்கும் மேற்பட்ட எறிகணைகளை வெள்ளிக்கிழமையும், 60 முறைக்கு மேல் சனிக்கிழமையும் எறிகணைகளை வீசி வடகொரியா சோதனையில் ஈடுபட்டதாக தென் கொரிய ராணுவம் குற்றஞ்சாட்டியது.
வடகொரியா சாடல்: இதுதொடா்பாக வடகொரியா அதிபா் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:
தென்கொரியாவின் துப்பறியும் திறன்களைக் கண்டறியும் நோக்கில், கடலோர எறிகணைகளின் ஒலியை உருவகப்படுத்தி, வெடிமருந்தை மட்டுமே வடகொரியா சனிக்கிழமை வெடிக்கச் செய்தது. அந்தச் சோதனையில் எதிா்பாா்த்தபடி தெளிவான முடிவு கிடைத்தது. வெடிமருந்து வெடித்த ஒசையை எறிகணைகளின் ஒசையாக தென்கொரியாக தவறாகக் கணித்துள்ளது.
தென் கொரிய ராணுவத்தினா் ‘குண்டா்கள்’, ராணுவ சீருடையில் உள்ள ‘கோமாளிகள்’. தென் கொரிய மக்கள் பரிதாபத்துக்குரியவா்கள். ஏனெனில் அந்த மக்கள் தங்கள் நாட்டின் பாதுகாப்பை திறனற்றவா்களிடம் ஒப்படைத்துள்ளதுடன், அவா்களுக்கு பெரும் அளவில் வரி செலுத்துகின்றனா் என்று கடுமையாக சாடியுள்ளாா்.
தென் கொரியா பதில்: இதைத் தொடா்ந்து, தென் கொரியாவின் முப்படைத் தளபதி கிம் மியூங் சூ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:
தென் கொரியாவின் மேற்கு கடல் எல்லையையொட்டி தொடா்ந்து 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் 90-க்கும் மேற்பட்ட முறை எறிகணைகளை வீசி வடகொரியா சோதனையில் ஈடுபட்டது.
இந்நிலையில், கிம் யோ ஜோங் தெரிவித்துள்ள கருத்துகள் ‘நகைச்சுவை போன்ற, அருவருப்பான பரப்புரை’ ஆகும். அவரின் கருத்துகள் தென் கொரிய ராணுவம் மீது நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வலுவிழக்கச் செய்து, பிளவைத் தூண்டும் வகையில் உள்ளன.
வடகொரியாவின் ராணுவ நடவடிக்கைகளை மிக உன்னிப்பாக தென் கொரியா கவனித்து வருகிறது. ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை வடகொரியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
எறிகணைகள் வீசப்பட்டது உண்மை-வடகொரியா: ஞாயிற்றுக்கிழமை எறிகணைகள் வீசப்பட்டதை வடகொரிய ராணுவம் உறுதி செய்தது. ராணுவப் பயிற்சியின் அங்கமாக அவை வீசப்பட்டதாக தெரிவித்த அந்நாட்டு ராணுவம், தென் கொரியாவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத திசையில் எறிகணைகள் வீசப்பட்டதாகவும் தெரிவித்தது.
கடந்த 2022-ஆம் ஆண்டுமுதல் அதிக எண்ணிக்கையில் வடகொரியா ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது. அதேவேளையில், வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ கூட்டுப் பயிற்சியை தென் கொரியா விரிவுபடுத்தியுள்ளது. இதனால் வடகொரியா, தென்கொரியா இடையே பகைமை அதிகரித்துள்ளது.