எல்ஐசி ஏஜெண்டாக இருந்து ரூ.23,000 கோடி சம்பாதித்த லச்மன் தாஸ்.. யாரு சார் நீங்க..!!
இந்த உலகில் பலர் தங்களது சாதனைப் பயணத்தில் கடுமையான உழைப்பினாலும் அயராத அர்ப்பணிப்புகளாலும் உயர்ந்து தங்களுக்கென்று ஒரு தனித்துவமான இடத்தைத் தக்க வைத்துக் கொள்கின்றனர்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் லச்மன் தாஸ் மிட்டல்.ஓய்வு பெற வேண்டிய வயது வந்துவிட்டால் நிம்மதியான வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்று பலரும் நினைப்பது சகஜம். ஆனால் லச்மன் தாஸ் மிட்டல் தனது தொழில் பயணத்தில் அந்த வயதில் தான் அடியெடுத்து வைத்தார். சோனாலிகா குரூப்பின் தலைவர் லச்மன் தாஸ் மிட்டல் இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய டிராக்டர் தயாரிப்பு நிறுவனத்தின் சொந்தக்காரராக இப்போது உள்ளார்.
சந்தேகமே இல்லாமல் இவர் தான் நாட்டின் மிகவும் வயதான கோடீஸ்வரர் ஆவார். இவரது நிகர சொத்து மதிப்பு ரூ.23,000 கோடி ஆகும். பஞ்சாபின் ஹோஷியாபூரில் பிறந்த மிட்டல் தனது வாழ்க்கையை ஒரு எல்ஐசி ஏஜெண்டாக ஆரம்பித்தார். தனது 60 வயது வரை எல்ஐசி ஏஜெண்டாகப் பணியாற்றியவருக்கு ஓய்வு பெறுவதில் மனது ஒப்பவில்லை.அவரது எண்ணம் சொந்தமாக ஒரு தொழிலை சிறிய அளவில் செய்ய வேண்டும் என்பதாக இருந்தது.
1996 ஆம் ஆண்டில் சோனாலிகா டிராக்டர்ஸ் என்ற கம்பெனியைத் தொடங்கி விவசாய தளவாடங்களை உற்பத்தி செய்யத் தொடங்கினார்.அத்துடன் டிராக்டர் தயாரிப்பிலும் அவர் மும்முரமாக ஈடுபட்டார். அவரது டிராக்டருக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது, வியாபாரமும் பெருகியது.
தான் மேற்கொண்ட தொழிலில் லச்மன் தாஸ் மிட்டலின் முனைப்பும் கடினமான உழைப்பும் அவருக்கு தேசிய அளவிலும் உலகளவிலும் இருந்து ஏராளமான பாராட்டுகளை குவித்தன.பெருமைக்குரிய உத்யோக் ரத்னா என்ற விருதையும் அவர் பெற்றுள்ளார்.அவரது சோனாலிகா டிராக்டர் கம்பெனி வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் விரும்பும் வாகனமாக உள்ளது.சாதாரண எல்ஐசி ஏஜெண்டாக இருந்து ஒரு கோடீஸ்வர தொழிலதிபராக உயர்ந்துள்ள லச்மன் தாஸ் மிட்டலின் வாழ்க்கை அவ்வளவு எளிமையானதல்ல.
அவரது கடினமான உழைப்பின் காரணமாகத் தான் இத்தகைய மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.பல்வேறு பின்னடைவுகளை தொழிலில் சந்தித்தபோதும் அவர் தனது இலக்கை நோக்கி உறுதியாகப் பயணித்தார். அவரது சேமிப்புகளை மல்டி பில்லியன் டாலர் எண்டர்பிரைசஸாக உயர்த்தியுள்ளார். இன்றைக்கு சோனாலிகா குரூப் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது. மிட்டலின் இந்தச் சாதனை மற்றவர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.