ஆசிரியை திருகியதால் அறுந்த 10 வயது மாணவனின் காது.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
பள்ளி மாணவரின் காதை பிடித்து ஆசிரியை திருகியதில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் அளவிற்கு மாணவரின் உடல் நிலை பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10 வயது சிறுவன் ஒருவர் 5 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி மாணவரின் தாயைப் பள்ளியிலிருந்து தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட ஆசிரியர்கள், உங்கள் மகன் கீழே தவறி விழுந்து விட்டதாகவும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் அவரிடம் கூறினர்.
அதனையடுத்து மருத்துவமனைக்கு உறவினரோடு சென்று மகனை பார்த்து விசாரித்தார். அப்போது, தான் கீழே விழவில்லை எனவும் விளையாடியதற்காக நாயகி என்ற பெயர்கொண்ட ஆசிரியை தன் காதை திருகியதாகவும் அம்மாணவர் கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மழலைகளிடம் மனிதாபிமானம் இல்லாமல் சர்ஜரி செய்யும் அளவிற்கு காதை பதம் பார்த்த ஆசிரியரை குழந்தைகள் மீதான வன்முறை சட்டத்தில் உடனடியாக கைது செய்ய வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுததுள்ளனர்.