நம்ம நாட்டிலேயே அவர மாதிரி தைரியமான பிளேயர் யாருமில்ல.. 2024 உ.கோ சான்ஸ் கொடுங்க.. ஹர்பஜன் கோரிக்கை
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி உலகக் கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
அதற்கு தயாராவதற்காக சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்களை வென்ற இந்தியா தென்னாப்பிரிக்க தொடரை சமன் செய்தது. இந்த தொடர்களில் ஸ்பின்னராக குல்தீப் யாதவ், ரவி பிஸ்னோய் ஆகியோர் விளையாடினார்கள்.
எனவே அந்த இருவருக்கு தான் உலகக் கோப்பையில் முதன்மை ஸ்பின்னராக விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக மற்றொரு நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹாலுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பது கடினமாகியுள்ளது. 2016இல் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்த அவர் 2021 வாக்கில் ஃபார்மை இழந்து தடுமாறினார்.
தைரியமான ஸ்பின்னர்:
அதனால் 2021 டி20 உலகக் கோப்பையில் அவரை கழற்றி விட்ட பிசிசிஐ அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுத்தது. அப்போது ஐபிஎல் தொடரில் ஊதா தொப்பியை வென்று ஃபார்முக்கு திரும்பிய சஹால் 2022 டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்பட்டாலும் விளையாடும் 11 பேர் அணியில் அஸ்வினுக்கே இடம் கிடைத்தது. அந்த வரிசையில் 2024 டி20 உலகக் கோப்பையிலும் அவர் கழற்றி விடப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம்.
இந்நிலையில் இந்தியாவிலேயே எதிரணி பேட்ஸ்மேன்கள் அடித்தாலும் அதற்கெல்லாம் பயப்படாமல் தைரியமாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுக்கும் ஸ்பின்னரான சஹால் உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் மற்றவர்களை விட சஹாலுக்கு முதன்மை ஸ்பின்னராக முன்னுரிமை கொடுப்பேன். அவர் ஏன் கழற்றி விடப்படுகிறார் என்பது எனக்கு தெரியவில்லை”