ஒரு பிரித்தானிய மருத்துவர், ஒரு மொழிபெயர்ப்பாளர், ஒரு கர்ப்பிணி: நடுவானில் நிகழ்ந்த அற்புதம்
கர்ப்பிணி ஒருவர் விமானத்தில் பயணித்துக்கொண்டிருக்கும்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட, மொழி தெரியாத அவருடன் மொழிபெயர்ப்பாளர் ஒருவருடைய உதவியுடன் பேசி, அவருக்கு பிரசவம் பார்த்துள்ளார் பிரித்தானிய மருத்துவர் ஒருவர்.
நடுவானில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி
ஒவ்வொரு பிரசவமுமே பெண்ணுக்கு மறுபிறப்புதான் என்று சொல்வார்கள். அப்படியிருக்க, நடுவானில், 35,000 அடி உயரத்தில் பெண்ணொருவர் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்த விடயம் ஒரு அற்புதம்தானே?
கடந்த வார இறுதியில், ஜோர்டான் தலைநகர் அம்மானிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று லண்டன் நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும்போது, நடுவானில் ஒரு 38 வயதுப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
மருத்துவர்கள் யாராவது இருக்கிறார்களா என பணிப்பெண்கள் கேட்க, யார் செய்த புண்ணியமோ தெரியாது, அந்த விமானத்தில் லண்டனில் பச்சிளம் குழந்தைகள் நல மருத்துவராகப் பணியாற்றும் ஹஸன் கான் என்னும் மருத்துவர், தனது நண்பர்களுடன் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார். அவரது நண்பர்களும் மருத்துவர்கள்தான்!
உடனடியாக ஹஸன் கான் அந்தப் பெண்ணைக் காண விரைய, அதற்குள் அவருக்கு பனிக்குடம் உடைந்துவிட்டது. அந்தப் பெண்ணிடம், நான் ஒரு மருத்துவர்தான் பயப்படாதீர்கள் என்று ஆறுதல் கூறலாம் என்றால், அந்தப் பெண்ணுக்கு ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் தெரியாது, ஹஸன் கானுக்கோ அந்தப் பெண்ணின் மொழி தெரியாது.
உடனடியாக, விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த ஒரு மொழிபெயர்ப்பாளர் உதவிக்கு வர, அவர் மருத்துவர் சொன்னதை அந்தப் பெண்ணிடம் கூற, அந்தப் பெண், பெண் குழந்தை ஒன்றைப் பிரசவித்திருக்கிறார்.
அற்புதம்
நடுவானில் பிரசவ வலியால் துடித்த ஒரு பெண்ணுக்கு மருத்துவர் பிரசவம் பார்க்க, விமானம் இத்தாலி நோக்கித் திரும்பியுள்ளது. இத்தாலியில் அந்தப் பெண்ணையும் அவரது குழந்தையையும் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். தாயும் சேயும் நலம் என பின்னர் செய்தி கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார் ஹஸன் கான்.
விடயம் என்னவென்றால், விமானத்தில் பயணித்த பயணிகளில் ஒருவர் கூட தாமதம் ஏற்படுவதாக முறுமுறுக்கவில்லை என்று கூறும் ஹஸன் கான், அவர்கள் எல்லோருமே நடந்ததைக் குறித்து ஆச்சரியத்தில் திளைத்துப்போயிருந்ததாகவும், தாங்கள் பயணிக்கும் நேரத்தில் இப்படி நடந்தது ஒரு அற்புதம் என்று கூறி வியந்ததாகவும் தெரிவிக்கிறார் ஹஸன் கான்.
பறக்கும் விமானத்தில் நடுவானத்தில் இதுவரை 74 பிள்ளைகள் பிறந்திருக்கிறார்களாம். அவ்வகையில், இந்தக் குழந்தை நடுவானில் விமானத்தில் பிறந்த 75ஆவது குழந்தை ஆகிறாள்.