கேரள லொட்டரியில் ரூ.70 லட்சம் வென்ற வியாபாரி.., திடீர் தற்கொலை
கேரளாவை சேர்ந்த வியாபாரி ஒருவர் லொட்டரியில் ரூ.70 லட்சம் வென்ற நிலையில், அவர் திடீரென தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள லொட்டரி
கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லொட்டரியில் புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளின் போது பம்பர் குலுக்கல் நடத்தப்படும்.
இதில் முதல் பரிசுத்தொகை கோடிகளிலும், ஏராளமானோருக்கு லட்சங்கள் மற்றும் ஆயிரங்களிலும் பரிசுத் தொகை கிடைக்கும்.
இவ்வாறு குலுக்கல் நடைபெறும்பொழுது கேரளாவை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்து சுற்றுலா வருபவர்களும் லொட்டரி சீட்டை வாங்கிச்செல்வார்கள்.
அவ்வாறு வாங்கிச் செல்லும் பிற மாநிலத்தவர்களும் பம்பர் பரிசையும் வென்றிருக்கிறார்கள்.
இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கேரள லொட்டரியில் ரூ.70 லட்சம் பரிசு பெற்ற வியாபாரி ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட வியாபாரி
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் நெல்லிக்குன்னு பகுதியை சேர்ந்தவர் விவேக் ஷெட்டி (37). இவர் அதே பகுதியில் கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில், விவேக் நேற்று தனது கடைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில், விவேக் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என்பது உடனடியாக தெரியவில்லை.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் லொட்டரி மூலம் அவருக்கு ரூ.70 லட்சம் பரிசாக கிடைத்திருப்பதால், அவருக்கு பணப்பிரச்சினை எதுவும் இல்லை என்று விசாரணையில் உறுதியானது.
அப்படியானால் விவேக் எதற்காக தற்கொலை செய்தார்? என்று பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.