மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலா?
மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் முன்னாள் அமைச்சர்கள், பதவியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் என பலரும் பா.ஜ.க.வில் இணைந்து வருவது எதிர்க்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்து வருகிறது.
விளவங்கோடு:
இந்த நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்காக மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதாரணி ஓரிரு தினங்களுக்கு முன்பு, டெல்லியில் உள்ள பா.ஜ.க.
தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று பா.ஜ.க.வில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட விஜயதாரணி பா.ஜ.க.வில் இணைந்ததையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியும் அவரை அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கியது.
இதையடுத்து, விளவங்கோடு தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக சட்டப்பேரவை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
பொதுவாக ஒரு மக்களவைத் தொகுதியோ, சட்டமன்ற தொகுதியோ காலியானால் அந்த தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. தற்போது விளவங்கோடு தொகுதி காலியாகி இருப்பதால், அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.