வெள்ளத்தில் மிதக்கும் மயானம்.. உடலை எரிக்க தத்தளிக்கும் மக்கள்!
தூத்துக்குடியில் மயானம் மற்றும் எரிவாயு தகன மேடைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், நடமாடும் எரிவாயு தகன மேடை மூலம் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 17 ஆம் தேதி இடைவிடாது கொட்டிய கனமழையால், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதில், மயானம் மற்றும் எரிவாயு தகன மேடைகளும் தப்பவில்லை. இந்நிலையில், கடந்த 5 நாட்களாக மழை வெள்ளத்தில் மட்டுமின்றி இயற்கையாக இறந்தவர்களின் உடல்களையும் அடக்கம் செய்ய முடியாமல், உறவினர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். வெளி ஊர்களுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய, குறைந்தபட்சம் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாவதால் மக்கள் மேலும் துன்புறத்திற்கு ஆளாகினர். இச்செலவைக் குறைக்க மாநகராட்சி புதிய ஏற்பாட்டை செய்துள்ளது.
இந்நிலையில், கோவையில் இருந்து, தனியார் மையம் சார்பில், நடமாடும் எரிவாயு தகன மேடை தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் இல்லம் அருகே நடமாடும் தகன மேடை மூலம் உடல்கள் எரியூட்டப்படுகின்றன.
தனியார் மையம் சார்பில் குறைந்த செலவிலசெய்யப்படும் இப்பணியால், இறந்தவர்களின் உறவினர்களுக்கு செலவு மீதம் ஆவதுடன் கால விரயம் மற்றும் மன அழுத்தம் சற்று விலகுகிறது. மேலும், இறந்தவர்களின் உடல்களை சொந்த மண்ணிலேயே இறுதி சடங்கு செய்வது மன திருப்தி அளிப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒரு புறம் வாட்ட, அவர்களை அடக்கம் செய்வதில் நிலவும் சிக்கல்கள் பெருமழையின் கோர முகத்தை காட்டுகின்றன. மயானம் மற்றும் எரிவாயு தகன மேடையில் தேங்கியுள்ள வெள்ளத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாகும்.