லாபத்தை தட்டி தூக்கிய நிறுவனம்… புதிய உச்சத்தில் PCBL பங்கு விலை… தரகு நிறுவனங்கள் சொல்வது என்ன?

நாட்டின் முன்னணி கார்பன் பிளாக் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று பிசிபிஎல். முன்பு பிலிப்ஸ் கார்பன் பிளாக் என்று அழைக்கப்பட்ட பிசிபிஎல் நிறுவனம் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது.
2020 ஏப்ரல் முதல் இப்பங்கின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்நிறுவனம் கடந்த திங்கட்கிழமையன்று தனது 2023 டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டது.இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த 2023-24ம் நிதியாண்டில் 3வது காலாண்டில் (2023 அக்டோபர்- டிசம்பர்) இந்நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 52 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.148 கோடியாக உயர்ந்துள்ளது. 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 22 சதவீதம் உயர்ந்து ரூ.1,657 கோடியாக அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கார்பன் பிளாக் சப்ளை நெருக்கடி இருந்ததால், கடந்த காலாண்டில் அளவு அடிப்படையில் இந்நிறுவனத்தின் ஏற்றுமதி 21 சதவீதம் வளர்ச்சி கண்டது. கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் திருப்திகரமாக இருந்ததால், கடந்த சில தினங்களாக பிசிபிஎல் நிறுவன பங்கு விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த சனிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.333.95ஐ எட்டியது. 2020 ஏப்ரல் முதல் இந்நிறுவன பங்கின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
2020 ஏப்ரலில் ரூ.32ஆக இருந்த இருந்த இப்பங்கின் விலை தற்போது ரூ.325 என்ற அளவில் உள்ளது. இந்த காலத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 700 சதவீதத்துக்கு மேல் ஆதாயத்தை கொடுத்துள்ளது. பிசிபிஎல் நிறுவனம் தனது முக்கிய கார்பன் பிளாக் வணிகத்தில் வலுவான செயல்திறனை வெளிப்படுத்தி வருவது மற்றும் சிறப்பு ரசாயன துறையில் அடியெடுத்து வைத்தது போன்ற காரணங்களால், கடந்த 2023ம் ஆண்டில் இப்பங்கு விலை 94 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
பிசிபிஎல் நிறுவன பங்கு விலை தற்போது உச்சத்தில் உள்ளநிலையில், இந்த பங்குகளை வாங்கலாம் என்று முன்னணி தரகு நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன. ஜெஎம் பைனான்சியல் நிறுவனம், பிசிபிஎல் நிறுவன பங்கை வாங்கலாம் என்ற தனது மதிப்பீட்டை பராமரித்தது. மேலும். பிசிபிஎல் நிறுவன பங்கின் இலக்கு விலையை ரூ.355ஆக உயர்த்தி மாற்றியமைத்தது. முதலில் அந்த பங்கின் இலக்கு விலையை ரூ.330 என நிர்ணயம் செய்து இருந்தது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *