வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு இயற்கை விவசாயம் செய்யும் தம்பதி @ திண்டுக்கல்
மதுரை: வெளி நாட்டு வேலையை விட்டுவிட்டு சொந்த ஊரில் இணைந்தே இயற்கை விவசாயம் செய்யும் தம்பதி. வழக்கமான விவசாயம் செய்யாமல் மாற்றி யோசித்து ‘பேஷன் புரூட்’ விளைவித்து சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
விரைவில் பாட்டிலில் ஜூஸ் தயாரித்து விற்பனை செய்யவும் ஆயத்தமாகி வருகின்றனர். இதன் மூலம் இளைஞர்களுக்கு வழிகாட்டுவதோடு விவசாயிகளுக்கும் செலவின்றி விவசாயம் செய்ய ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். தூத்துக்குடியைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி சு.விவேக் தேவ பிரகாஷ் ( 40 ). எம்.பி.ஏ. படித்துள்ளார். இவரது மனைவி சோபியா மேரி ஸ்டெல்லா ( 40 ). இவர் எம்எஸ்சி ( நர்சிங் ) படித்துள்ளார். இவர்கள் இருவரும் சவுதி அரேபியாவில் வேலை பார்த்தனர். சு.விவேக் தேவபிரகாஷ், பால் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக இருந்தார்.
இவரது மனைவி அங்கு அரசு மருத்துவமனையில் மேலாளராக பணியாற்றினார். 2018-ல் பெண் குழந்தைகளுக்காக இந்தியா திரும்பியவர்கள் இயற்கை விவசாயம் செய்ய முடிவெடுத்தனர். இதற்காக சோபியாவின் சொந்த ஊரான திண்டுக்கல் கொடைரோடு அருகே கொழுஞ்சிபட்டியில் குத்தகைக்கு நிலம் எடுத்து இயற்கை விவசாயம் செய்தனர்.
படிப்படியாக வளர்ச்சி அடைந்து தற்போது 7 ஏக்கர் சொந்த நிலத்தில் கத்தரி, வெண்டை, சீனி அவரை உள்ளிட்ட பயிர்ளை சாகுபடி செய்து வருகின்றனர். அதோடு மலையடிவாரப் பகுதி என்பதால் குறைந்த பராமரிப்புள்ள ‘பேஷன் புரூட்’ எனும் தாட்பூட் பழத்தை பந்தல் முறையில் சாகுபடி செய்துள்ளனர். திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
இது குறித்து சு.விவேக் தேவபிரகாஷ், சோபியா மேரி ஸ்டெல்லா ஆகியோர் கூறியதாவது: செலவில்லாமல் காய்கறிகள் உற்பத்தி செய்ய இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறோம். இதற்காக நாட்டு மாடுகள், ஆடுகள், கோழிகள் வளர்த்து வருகிறோம். இயற்கை முறையில் காய்கறிகள் விளைவித்து சென்னையில் நேரடியாக விற்பனை செய்து வருகிறோம். தென்னையில் ஊடுபயிராக வாழை, சேனைக்கிழங்கு சாகுபடி செய்துள்ளோம். மேலும் ஒன்றரை ஏக்கரில் பேஷன் பழம் பயிரிட்டுள்ளோம்.