அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 76 கி. கேக் வெட்டி கொண்டாட்டம்..!
உலகம் முழுவதும் மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் என பல்வேறு துறைகளில் பெண்கள் அளிக்கும் பங்களிப்பை கெளரவப்படுத்தும் விதமாக ‘உலக மகளிர் தினம்’ கொண்டாடப்படுகிறது. பாலின சமத்துவம், சம உரிமை, சம ஊதியம், சம வாய்ப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் விதமாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பெண்ணின் பெருமையை இந்தப் பூவுலகிற்குப் பறைசாற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நன்னாளில் தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவச்சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 76 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.