சரித்திரத்திலேயே யாரும் செய்யாத சாதனை.. டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தை பிடிப்பாரா ஜெய்ஸ்வால்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட்டில் களமிறங்க உள்ள இந்திய அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போது டெஸ்ட் போட்டிகளில் 861 ரன்கள் குவித்து இருக்கிறார் ஜெய்ஸ்வால். இதுவரை 7 போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கும் அவர், 13 இன்னிங்ஸ்களில் 861 ரன்கள் குவித்துள்ளார். அவர் நான்காவது டெஸ்ட் போட்டியில் இன்னும் 139 ரன்கள் குவித்தால் மிகக் குறைந்த போட்டிகளில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய வீரர்கள் பட்டியலில் டான் பிராட்மேனை அடுத்து இரண்டாம் இடத்தை பிடிப்பார். டான் பிராட்மேன் 7 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டினார்.
அவர் நான்காவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸிலேயே 139 ரன்கள் குவித்தால் இந்திய அளவில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை வினோத் காம்ப்ளியுடன் பகிர்ந்து கொள்வார். வினோத் காம்ப்ளி 12 போட்டிகளில் 14 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டினார்.
ஜெய்ஸ்வால் கடந்த இரண்டு போட்டிகளிலும் இரட்டை சதம் அடித்து இருப்பதால் நான்காவது டெஸ்ட் போட்டியில் அவர் மீண்டும் சதம் அடித்து 1000 ரன்களை கடக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. அவர் முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து இருந்தார்.அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்து இருந்தார். இதுவரை இந்த தொடரின் மூன்று போட்டிகளின் முடிவில் 545 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் 111 ரன்கள் குவிக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற விராட் கோலி சாதனையை உடைப்பார் ஜெய்ஸ்வால்.
நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. ராஞ்சி மைதானத்தில் இது நல்ல ஸ்கோர் என்பதால் இந்திய அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது. இதற்கு முந்தைய போட்டிகளில் ரன் குவித்த ஜெய்ஸ்வால் இந்தப் போட்டியிலும் ரன் குவிக்க வேண்டிய தேவை உள்ளது.