மூதாட்டிக்கு உதவ ரயிலில் கெட்டிலில் வெந்நீர் வைத்த இளைஞருக்கு ரூ.1000 அபராதம்!
லேயைச் சேர்ந்த ஒருவர் ரயிலில் மொபைல் போன் சார்ஜிங் பாயிண்ட்டில் மின்சார கெட்டிலில் தண்ணீரைக் கொதிக்க வைக்க பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.
ரயில்வே சட்டத்தின் பிரிவு 147 (1) இன் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அலிகாரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 36 வயதான அவர் சனிக்கிழமை மாலை கயாவிலிருந்து டெல்லிக்கு மகாபோதி எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் செய்தார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மொபைல் தவிர வேறு மின்சாதனத்தைச் சார்ஜ் செய்தால் ஷார்ட் சர்க்யூட்டை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் அதனால் ரயிலின் 3 டயர் ஏசி பெட்டியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரயிலில் உடன் பயணித்த மூதாட்டி ஒருவர் ஒரு வயதான பெண், மருந்து உட்கொள்ள வெந்நீர் தேவைப்பட்டபோது, அந்ந இளைஞர் அவருக்காக பேண்ட்ரி ஊழியர்களிடம் தண்ணீர் கேட்டுள்ளார். அவர்கள் வெந்நீர் தர மறுத்துவிட்டனர். இதனால், தானே கெட்டிலில் தண்ணீரை கொதிக்க முடிவு செய்துள்ளார்.
அண்மையில் அலிகார் ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஓடும் ரயிலுக்குள் குளிர் காய்வதற்கு ‘நெருப்பு’ மூட்டியதாக இருவரைக் கைது செய்தனர். ஜனவரி 5ஆம் தேதி, அஸ்ஸாமில் இருந்து டெல்லி செல்லும் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ்வே ரயிலில் இந்தச் சம்பவம் நடந்தது.
அந்த ரயிலில் பயணித்த ஆயிரக்கணக்கான பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர். இருவரும் ஹரியானாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிந்தது. இருவரும் ஒரு ரயில்பெட்டியின் உள்ளே வரட்டிகளை எரித்துக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.