பன்ச் வசனம் பேசும் பேய்… ஹன்சிகாவின் ‘கார்டியன்’ பட அப்டேட்!

ஹன்சிகா நடித்துள்ள புதிய படம், கார்டியனின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

2019 வரை திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த ஹன்சிகா அதன் பிறகு வாய்ப்புகள் இல்லாமல் முடங்கிப் போனார். 2022 ல் அவரது 50 வது படம் மஹா வெளியானது. இதில் சிம்பு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அதே வருடம் ஹன்சிகா சோகையில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இப்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். 2023 ல் ஹன்சிகா நடிப்பில் பார்ட்னர் படம் மட்டுமே வெளியானது. தெலுங்கில் மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ் என இரண்டு படங்களில் நடித்தார். இந்த வருடம் ஹன்சிகா நடிப்பில் தமிழில் 4 படங்கள் வெளியாக உள்ளன. அதில் முதல் படமாக கார்டியன் வெளியாகிறது.
கே.எஸ்.ரவிக்குமாரிடம் அசோஸியேட் டைரக்டர்களாக இருந்த சபரி – குருசரவணன் இணைந்து கார்டியன் படத்தை இயக்கியுள்ளனர்.

இவர்கள் கூகுள் குட்டப்பா படத்தை இயக்கியவர்கள். இவர்களது இரண்டாவது படமாக கார்டியன் தயாராகியுள்ளது. இதன் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியானது. அதில், பேயாக ஹன்சிகா வரும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. முக்கியமாக, “நீ கோயில்ல இருந்தாலே கொன்னு பொதச்சுடுவேன். இது என் இடம்” என்று அவர் ‘பன்ச்’ வசனம் பேசியிருந்தது ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. கார்டியனில் ஹன்சிகாவுடன், சுரேஷ்மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியனவற்றை இயக்குநர்களில் ஒருவரான குருசரவணன் எழுதியுள்ளார்.

சிம்பு – ஹன்சிகா நடித்த வாலு, விக்ரம் – தமன்னா நடித்த ஸ்கெட்ச், விஜய் சேதுபதி – ராஷி கண்ணா நடித்த சங்கத்தமிழன் ஆகிய படங்களை இயக்கிய விஜய்சந்தர் கார்டியனை தயாரித்துள்ளார். ஒரு பெண்ணை முதன்மை கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் பெண்களின் நலன், பெண்களின் பாதுகாப்பு, பெண்களின் உரிமை ஆகியனவற்றைப் பேசும் வண்ணம் இருக்கும் என படக்குழு கூறியுள்ளது.

இதற்குப் பொருத்தமாக, மார்ச் 8 மகளிர் தினத்தில் படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *