மும்பையில் ரூ.5.38 கோடிக்கு வீடு.. சொந்தமாக வாங்கிய இந்திய இளம் வீரர்.. ஜெய்ஸ்வாலின் அசுர வளர்ச்சி!
இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரூ.5.38 கோடிக்கு சொந்தமாக வீடு ஒன்றை வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். மும்பையை சேர்ந்த இவர் சிறுவயது முதலே கடுமையாக உழைத்து இந்திய அணியின் உச்சத்திற்கு வந்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இரு இரட்டை சதம் மற்றும் ஒரு அரைசதம் உட்பட மொத்தமாக 545 ரன்களை ஜெய்ஸ்வால் விளாசியுள்ளார்.
வினோத் காம்ப்ளி, விராட் கோலி ஆகியோருக்கு பின் அடுத்தடுத்த போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற பெருமையையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் விராட் கோலிக்கு இணையான ஆதிக்கத்தை இங்கிலாந்து அணி மீது ஜெய்ஸ்வால் செய்து வருவதாக ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இதனால் ஜெய்ஸ்வால் மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கிரிக்கெட் களத்தில் மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் ஜெய்ஸ்வாலின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் அறிமுகமான போது, அவரது குடும்பத்தினர் மும்பையின் தானே பகுதியில் அமைந்துள்ள 5 பெட் ரூம்களை கொண்ட பிளாட்டிற்கு குடிபெயர்ந்தனர். இந்த மாற்றம் நடந்து 6 மாதத்தில் ஜெய்ஸ்வால் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளார்.
மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் கட்டப்பட்டுள்ள நட்சத்திர வீடு ஒன்றை யஷஸ்வி ஜெய்ஸ்வால் சொந்தமாக வாங்கியுள்ளார். அதன் மதிப்பு ரூ.5.38 கோடி என்று தெரிய வந்துள்ளது. அதானி ரியால்டி என்ற கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ள நட்சத்திர பிளாட்டை ஜெய்ஸ்வால் வாங்கியுள்ளார். இந்த பிளாட்டிற்குள்ளேயே அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
22 வயதிலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல் அணிக்காக விளையாடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரூ.4 கோடிக்கு தக்க வைக்கப்பட்டிருந்தார். அதன்பின் அவரது சம்பளம் உயர்வை கண்டுள்ளது. அதேபோல் விளம்பர ஒப்பந்தங்களிலும் ஜெய்ஸ்வால் அடுத்தடுத்தடுத்து ஆர்வம் காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.