10 வயதில் இருந்தே மெளனமாக இருப்பவர்.., அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்காக உறுதிமொழி
தனது 10 வயதில் இருந்தே மெளனமாக இருக்கும் மோனி பாபா, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழுக்காக காத்திருக்கிறார்.
ராமர் கோயில் கும்பாபிஷேகம்
பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரும் ஜனவரி 22 -ம் திகதி நடைபெற உள்ளது. அப்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிறுவ உள்ளார்.
மேலும், ராமர் கோயிலின் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்கள் அழைக்கப்பட உள்ளனர். இவர்களை தவிர கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
10 வயதில் இருந்தே மௌனம்
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒருவர் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று தனது 10 வயதில் இருந்தே மெளனமாக இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் எங்கு சென்றாலும் வெறும் காலுடன் நடக்கிறார். அதனால் அவரை எல்லாரும் மோனி பாபா என்று அழைத்து வருகிறார்கள்.
மோகன் கோபால் தாஸ் என்று அழைக்கப்பட்ட மோனி பாபா, பாபர் மசூதியை அகற்றிய சேவகர்களுடன் அயோத்தியில் களத்தில் இருந்தவர். இவர் தனக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு விடுப்பார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக தினமும் ஆட்சியர் அலுவலகம் சென்று விண்ணப்பித்து வருகிறார். அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு ஸ்லேட்டில் எழுதி பதில் அளித்து வருகிறார்.
இவரின் பூர்வீகம் சூர்யா நகர் புலாவ் பாலாஜி ஆகும். தற்போது மத்திய பிரதேசத்தில் உள்ள டாடியா கோவில்களில் வசித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.