கனவுல கூட நெனச்சு பாக்க முடியாத அளவுக்கு மைலேஜ் தரும் மாருதி கார்! 5 ரூபா மிட்டாய் மாதிரி ஆளாளுக்கு வாங்கறாங்க

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara). இது மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 23,425 க்ராண்ட் விட்டாரா கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு 1,13,387 ஆக உயர்ந்துள்ளது. இது 389 சதவீத வளர்ச்சி ஆகும். மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே கடந்த 2022ம் ஆண்டில் சுமார் 3 மாதங்கள் மட்டுமே மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா விற்பனையில் இருந்தது.

ஆனால் 2023ம் ஆண்டில் முழுமையாக 12 மாதங்களும் இந்த கார் விற்பனையில் இருந்துள்ளது. இதன் காரணமாகவே 2022ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2023ம் ஆண்டில் விற்பனை எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. இருப்பினும் 2023ம் ஆண்டில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் இவ்வளவு பெரிய விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது என்பது சாதாரண விஷயமல்ல.

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் அதிநவீன வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை. இதில், பனரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், கனெக்டட் கார் தொழில்நுட்பம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், 6 ஏர்பேக்குகள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இவை எல்லாம் தவிர டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸட்டர் போன்ற வசதிகளும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் கொடுக்கப்பட்டுள்ளன. செயல்திறனை பொறுத்தவரையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில், 1.5 லிட்டர் கே15சி மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு 21.11 கிலோ மீட்டர் மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் ஒரு லிட்டருக்கு 20.58 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதவிர 1.5 லிட்டர் 3 சிலிண்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் இ-சிவிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 27.97 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் ஆரம்ப விலை 10.70 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 19.99 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) உள்ளிட்ட கார்களுடன் இந்த கார் போட்டியிட்டு வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *