சூர்யகுமார் அனுப்பிய ஒரு மெசேஜ்.. என்னை இங்கு கொண்டு வந்துவிட்டது.. சர்பராஸ் கான் தந்தை நெகிழ்ச்சி!
இந்திய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் அனுப்பிய மெசேஜே நான் ராஜ்கோட் மைதானம் வருவதற்கு காரணம் என்று சர்பராஸ் கானின் தந்தை நெளஷத் கான் கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சர்பராஸ் கான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இந்திய அணிக்காக களமிறங்கிய முதல் இன்னிங்ஸிலேயே உலகையே திரும்பி பார்க்க வைத்துவிட்டார் சர்பராஸ் கான். 48 பந்துகளிலேயே அரைசதம் விளாசிய சர்பராஸ் கான், ஜடேஜா செய்த தவறு காரணமாக 62 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
இவர் ரன் அவுட்டானதை ஏற்ப முடியாமல் கேப்டன் ரோகித் சர்மா தனது கேப்பை கழற்றி தூக்கி எறிந்து கோபத்தை வெளிப்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் நட்சத்திர வீரரான ஜடேஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சர்பராஸ் கான் ரன் அவுட்டானதற்கு எனது தவறே காரணம். அவர் மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடினார் என்று பதிவிட்டார்.
இதன் மூலமாகவே சர்பராஸ் கான் எப்படியான இன்னிங்ஸை விளையாடி இருக்கிறார் என்பதை அறிய முடியும். ஆனால் சர்பராஸ் கானை விடவும் நேற்றைய நாளில் அவரின் தந்தை நெளஷத் கான் தான் இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பேசப்பட்டு வந்தார். சர்பராஸ் கானுக்கு டெஸ்ட் அறிமுக கேப் வழங்கியதை கண் கலங்கி பார்த்து கொண்டே இருந்த நெளஷத் கான், அந்த கேப்பை கைகளில் கொடுத்த போது, அதற்கு முத்தம் கொடுத்து ஆனந்த கண்ணீர் சிந்தினார்.
சர்பராஸ் கான் ஆடிய ஒவ்வொரு ஷாட்டிற்கும் அவரின் தந்தை நெளஷத் கானுக்கு க்ளோஸ் அப் வைக்கப்பட்டது. அவரின் பதற்றம் ஒவ்வொரு ரசிகனுக்கும் தொற்றி கொண்டது. இந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்த பின் நெளஷத் கான் அளித்துள்ள பேட்டி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், முதலில் நேரடியாக மைதானத்திற்கு வர வேண்டாம் என்றே நினைத்திருந்தேன். ஏனென்றால் நான் நேரில் வந்தால் சர்பராஸ் கானுக்கு தேவையில்லாத பிரஷர் ஏற்படும் என்று நினைத்தேன். எனக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை.
ஆனால் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் அனுப்பிய மெசேஜ் என்னை இங்கு கொண்டு வந்துவிட்டது. அவர் அனுப்பிய மெசேஜில், உங்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள்.. நான் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானேன். அப்போது என் தந்தை, தாய் இருவரும் என் பின் நின்றிருந்தார்கள்.
அந்த தருணத்தை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. இதுபோன்ற தருணங்கள் அடிக்கடி வராது. அதனால் நிச்சயம் மைதானத்திற்கு நேரில் செல்லுங்கள் என்று தெரிவித்தார். சூர்யகுமார் அனுப்பிய மெசேஜை பார்த்த பின் மைதானத்திற்கு வர மாட்டேன் என்று சொல்வதற்கு எந்த காரணமும் இல்லை. ஒரு மாத்திரையை போட்டுக் கொண்டு உடனடியாக ராஜ்கோட் வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.