1000 குதிரை ஆற்றலில் அலுங்காம குலுங்காம இயங்கும் புது எலக்ட்ரிக் கார்!! பூரான் டிசைனில் ஹெட்லைட் செட்-அப்!
பி.ஒய்.டி (BYD) நிறுவனம் அதன் லக்சரி எலக்ட்ரிக் செடான் காரை சர்வதேச சந்தையில் வெளியீடு செய்துள்ளது. முதற்கட்டமாக சீனாவில் விற்பனைக்கு செல்லவுள்ள இந்த எலக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களையும், இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளதா என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
சீனாவில் எலக்ட்ரிக் கார்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கு பஞ்சமே கிடையாது. அத்தகைய இவி நிறுவனங்களுள் ஒன்றுதான் பி.ஒய்.டி ஆகும். பிஒய்டி நிறுவனம் அதன் லக்சரி எலக்ட்ரிக் கார்களை யாங்வாங் என்ற துணை பிராண்டில் விற்பனை செய்கிறது. அந்த வகையில், புதிய எலக்ட்ரிக் செடான் காரையும் ‘யு7’ (U7) என்ற பெயரில் யாங்வாங் பிராண்ட் வாயிலாக வெளியீடு செய்துள்ளது.
பிஒய்டியின் யாங்வாங் பிராண்டின் மூலமாக வெளியீடு செய்யப்பட்டுள்ள 3வது எலக்ட்ரிக் கார் இதுவாகும். இதற்கு முன்னர் யு8 என்ற எலக்ட்ரிக் எஸ்யூவி காரும், யு9 என்ற எலக்ட்ரிக் சூப்பர் காரும் யாங்வாங் பிராண்டில் இருந்து வெளியீடு செய்யப்பட்டன. புதிய யு7 எலக்ட்ரிக் காரின் முக்கிய சிறப்பம்சங்களுள் ஒன்று இதில் கிடைக்கக்கூடிய பவர் அவுட்-புட் ஆகும்.
சுமார் ஆயிரம் குதிரையாற்றலுக்கும் அதிகமான இயக்க ஆற்றலை இந்த எலக்ட்ரிக் காரில் பெறலாம் என பிஒய்டி தெரிவித்துள்ளது. இதன் மூலமாக, மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் பிரபலமான இ.க்யூ.இ எலக்ட்ரிக் காருக்கு இது நேரடி போட்டியாக விளங்கும். சீனாவில் இந்த எலக்ட்ரிக் கார் இந்த 2024ஆம் ஆண்டின் 2ஆம் பாதியில் விற்பனைக்கு செல்லவுள்ளது.
4 கதவுகளை கொண்ட புதிய யு7 எலக்ட்ரிக் காரை அதன் வழக்கமான இ4 பிளாட்ஃபாரத்தில் பிஒய்டி நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதே பிளாட்ஃபாரத்தில் தான் யு8 எஸ்யூவியும், யு9 சூப்பர்காரும் உருவாக்கப்பட்டன. ஒரே பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளதால், சில டிசைன் ஹைலைட்களை மற்ற யாங்வாங் எலக்ட்ரிக் கார்களில் இருந்து பெற்றுள்ளது.
மெர்சிடிஸ்-பென்ஸ் இ.க்யூ.இ மற்றும் பிஎம்டபிள்யூ ஐ5 எலக்ட்ரிக் கார்களை காட்டிலும் யு7 எலக்ட்ரிக் கார் மிகவும் ஏரோடைனாமிக்ஸுக்கு ஏற்ற உடலமைப்பை கொண்டதாக உள்ளது. புதிய யாங்வாங் யு7 எலக்ட்ரிக் காரின் இழுவை குணக எண் 0.195சிடி ஆகும். யு7 எலக்ட்ரிக் காரின் நீளம் 5,200மிமீ மற்றும் அகலம் 2,000மிமீ ஆகும்.
யாங்வாங் யு8 எலக்ட்ரிக் எஸ்யூவி காரை போன்று ரேஞ்ச்சை அதிகமாக்கக்கூடிய கருவிகளுடன் பவர்டிரெயினை யு7 கொண்டுள்ளதா அல்லது யு9 மாடலை போன்று ப்யூர்-இவி பவர்டிரெயினை கொண்டுள்ளதா என்பது உறுதியாக தெரியவில்லை. சீனாவில், புதிய யாங்வாங் யு7 காரின் விலை ரூ.1.2 கோடி என்ற அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.