பல்சர் என்.எஸ் பைக்கிற்கு சவால் விடும் புதிய ஹீரோ பைக்!! 125சிசி-இல் எந்த பைக்கை வாங்குவது?
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் அதன் புதிய எக்ஸ்ட்ரீம் 125ஆர் (Xtreme 125R) மோட்டார்சைக்கிளை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. விற்பனையில் இந்த புதிய ஹீரோ பைக்கிற்கு டிவிஎஸ் ரைடர் 125 மற்றும் பஜாஜ் பல்சர் என்.எஸ்125 பைக்குகள் போட்டியாக விளங்குகின்றன.
இந்த மூன்று 125சிசி பைக்குகளில் பல்சர் என்எஸ்125 வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமானதாக உள்ளது. ஏனெனில், பொதுவாகவே பல்சர் பைக்குகளுக்கு சிறப்பான வரவேற்பு கிடைப்பது நமக்கு தெரியும். இருப்பினும், தோற்றத்தை பொறுத்தவரையில், மற்ற இரு பைக்குகளை காட்டிலும் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் மாடர்ன் தரத்தில் உள்ளது.
அதிக ஷார்ப் லைன்களுடன் மஸ்குலர் பைக்காக உருவாக்கப்பட்டு உள்ளதால், எக்ஸ்ட்ரீம் 125ஆர் இளம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் என ஹீரோ எதிர்பார்க்கிறது. என்ஜினை பொறுத்தவரையில், இந்த மூன்று 125சிசி பைக்குகளிலும் சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. இந்த மூன்றில், ரைடர் 125 பைக்கில் ஆயில்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.
ஆனால், மற்ற இரண்டிலும் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இதனால், ரைடர் பைக்கில் ஆக்டிவ் கூலிங் சிஸ்டம் தேவைப்படுவதில்லை. டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில் 3 வால்வுகளை கொண்ட என்ஜினும், பல்சர் என்எஸ் 125 பைக்கில் 4 வால்வுகளை கொண்ட என்ஜினும் பொருத்தப்படுகின்றன. எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கின் என்ஜின் சிஸ்டத்தில் எத்தனை வால்வுகள் உள்ளன என்பது குறித்த விபரம் இன்னும் வெளியாகவில்லை.
மற்றப்படி, என்ஜின் பைக்கிற்கு வழங்கும் இயக்க ஆற்றலில் இந்த மூன்று 125சிசி பைக்கிற்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. அதேபோல், இந்த பைக்குகளில் என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த 3 பைக்குகளில் பல்சர் என்எஸ்125 எடை மிக்கதாக 144 கிலோ எடை கொண்டதாக உள்ளது. டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் எடை வெறும் 123 கிலோ மற்றும் எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கின் எடை 136 கிலோ ஆகும்.
பல்சர் என்.எஸ்125 எடைமிக்கதாக இருப்பதற்கு காரணம், இந்த பைக்கில் 12 லிட்டர்களில் பெட்ரோல் டேங்க் வழங்கப்படுகிறது. அதுவே, மற்ற இரு பைக்குகளில் 10 லிட்டர்கள் கொள்ளளவில் மட்டுமே டேங்க் கொடுக்கப்படுகிறது. எடை மிக்கதாக இருப்பதாலோ என்னவோ என்.எஸ்125 பைக்கில் மைலேஜ் குறைவாக (55 – 57kmpl) கிடைக்கிறது. அதேநேரம் மற்ற இரண்டில், 66 – 67kmpl வரையிலான மைலேஜ் கிடைக்கிறது.
இந்த 3 பைக்குகளிலும் முன் சக்கரத்தில் 240மிமீ-இல் டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் 130மிமீ டிரம் பிரேக்கும் வழங்கப்படுகிறது. புதிய எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கில் மட்டுமே ஏபிஎஸ் வசதி கிடைக்கிறது. சஸ்பென்ஷன் செட்-அப்களில் இந்த 3 பைக்குகளிலும் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. என்.எஸ்125 பைக்கை தவிர்த்து, மற்ற இரண்டிலும் எல்இடி ஹெட்லைட் கிடைக்கிறது.
டர்ன் இண்டிகேட்டர்கள் புதிய எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கில் மட்டும் எல்இடி தரத்தில் கிடைக்கும். இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆனது என்.எஸ்125 பைக்கில் செமி-டிஜிட்டலாகவும், மற்ற இரண்டில் ஃபுல்லி-டிஜிட்டலாகவும் கிடைக்கும். அதேபோல், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி மற்றும் யுஎஸ்பி சார்ஜர் வசதிகளிலும் என்.எஸ்125 பைக் சற்று பின்தங்கியே உள்ளது. ஆனால், விலையில் மற்ற இரண்டை காட்டிலும் இந்த 125சிசி பல்சர் பைக் அதிகமானதாக உள்ளது.