இந்தியாவுக்கு வந்த புது பிரச்சனை.. 3.5% குழந்தைகள் ஓவர் வெயிட்டா இருக்காங்களாம்..
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்க குழந்தை பிறப்பு விகிதம், மக்கள் தொகை, முதியோர் எண்ணிக்கை ஆகியவை எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோல் மக்களின் ஆரோக்கியமும் முக்கியம்.
அந்த வகையில் உடல் பருமன் என்பது வருங்காலங்களில் இந்தியாவின் தலையாய பிரச்னையாக இருக்க போகிறது. சர்வதேச மருத்துவ இதழான லேன்சட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தான் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
3.5% குழந்தைகளுக்கு உடல் பருமன்: லேன்சட் மருத்துவ இதழில் வெளியாகும் தகவலின் படி 1990இல் இந்தியாவில் 5 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்களில் உடல் பருமனோடு இருந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 0.4 மில்லியன் அதாவது 4 லட்சம் மட்டுமே. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 12.5 மில்லியனாக உயர்ந்துள்ளது, அதாவது இந்தியாவில் 3.5% குழந்தைகள் உடல் பருமனாக இருக்கின்றனர். கிட்டத்தட்ட 1.25 கோடி குழந்தைகள் obesity மூலம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை , தேசிய குடும்ப நல சர்வே எடுக்கப்படுவது வழக்கம். அதில் சுகாதாரம், வீட்டு வசதி, கல்வி உள்ளிட்ட பல விவரங்கள் சேகரிக்கப்படும். அப்படி வெளியான புள்ளிவிவரமும் கூட இந்தியாவில் உடல் பருமனோடு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.
அதாவது இந்தியாவின் நகர்ப் பகுதிகளில் 19% பெரியவர்கள் (18 வயதுக்கு மேற்பட்டவர்கள்) அதிக உடல் எடையுடன் இருக்கின்றனர். 1990இல் இது வெறும் 2% தான் என்பதை நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
கிராமங்களிலும் அதிகரிக்கும் பிரச்னை: கிராமங்களிலும் அண்மை காலமாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் உடல் பருமன் பிரச்னை இருந்து வருகிறது. ஏனெனில் கிராமங்களில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் புழக்கம் அதிகரித்திருக்கிறது.
அண்மையில் வெளியான குடும்ப செலவுகள் தொடர்பான அறிக்கையில், கிராமங்களில் உள்ள ஒரு குடும்பம் 9.6% தொகையை பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்காக செலவிடுகிறது. அது மட்டுமின்றி உடல் இயக்கம் பெருமளவில் குறைந்துவிட்டன. எனவே கிராமங்களிலும் இந்த பிரச்னை பெரிதாகிவருவது தெரிய வந்துள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடு: உடல் பருமன் பிரச்னை ஒரு புறம் என்றால் ஊட்டச்சத்து குறைபாடு மற்றொரு பிரச்னை . இந்தியாவில் சுமார் 70%க்கும் மேலானவர்களுக்கு போதிய புரதச்சத்து இல்லை என சொல்லப்படுகிறது. எனவே அரசு இனி வரும் காலங்களில் மக்களின் உடல் நலன் சார்ந்த திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். குறிப்பாக உடல் பருமன், ஊட்டச்சத்து குறைவு காரணமாக மருத்துவ செலவுகளும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
மக்கள் உடல் நலன் சார்ந்த கவனத்தை அதிகப்படுத்த வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்குவது, உடல் பருமனாகாமல் பார்த்து கொள்வது போன்றவை எதிர்கால இந்தியாவை ஆரோக்கியமான நாடாக வைத்திருக்கும். இல்லையெனில் ஏற்கனவே நீரிழிவு கேபிடல் என பெயர் கிடைத்திருக்கும் நிலையில் உடல் பருமன் கேபிடல் என்ற பெயரும் சேர்ந்துவிடும்.