ஏ.ஆர். ரகுமான் முஸ்லிம் மதத்திற்கு மாறியது ஏன்? காரணம் இதுதான்!!
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் முஸ்லிம் மதத்திற்கு எதற்காக மாறினார் என்பது குறித்து அவரது சகோதரி ரைஹானா சில தகவல்களை பகிர்ந்துள்ளார். இவை ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன. திலீப் குமார் என்ற இயற்பெயரை கொண்ட ஏ.ஆர்.ரகுமான் ஆரம்ப கட்டத்தில் விளம்பரங்களுக்கு பின்னணி இசை அமைத்துக் கொண்டிருந்தார். அவரை இயக்குனர் மணிரத்தினம் தனது ரோஜா படத்தில் திரைத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
1992 ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான ரோஜா திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றதுடன் அதில் இடம்பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின. இந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருது கிடைத்தது. இதன் பின்னர் வந்த படங்களிலும் ஏ.ஆர்.ரகுமான் தரமான பாடல்களை கொடுத்ததால், அவரது புகழ் இந்தியா முழுக்க பரவத் தொடங்கியது.
அவருக்கு மகுடம் சூட்டும் விதமாக 2009 இல் வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. இந்திய திரை உலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சூப்பர் ஹிட் பாடல்களையும், பின்னணி இசையையும் ரசிகர்களுக்கு ஏ.ஆர். ரகுமான் கொடுத்து வருகிறார். சேகர் என்ற இசை கலைஞனுக்கு மகனாக பிறந்த திலீப் குமார் பின்னாளில் ஏ.ஆர். ரகுமான் என பெயரை மாற்றி, முஸ்லிம் மதத்தில் இணைந்தார். அது எதற்காக என்பது குறித்து அவரது சகோதரி ரைஹானா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது-
எனது அப்பா இறந்த பின்னர் நாங்கள் அதிக கஷ்டங்களை எதிர்கொண்டோம். அந்த நேரத்தில் எனது தாயார் சூஃபியிஸத்தால் ஈர்க்கப்பட்டார். அதன் பிறகு நாங்கள் குடும்பத்துடன் இஸ்லாம் மதத்திற்கு மாறினோம். இருப்பினும் நான் முஸ்லிமாக மாறுவதற்கு 10 ஆண்டுகள் ஆகியது.
ஏனென்றால் இஸ்லாம் மதத்தில் உள்ள சம்பிரதாயங்களை கடைபிடித்து 5 நேர தொழுகையை வழக்கமாக்கி கொள்வதற்கு எனக்கு 10 ஆண்டுகள் தேவைப்பட்டன. எனது பெயரை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது ஷனாஸ் என்று வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் ரைஹானா என்ற பெயர் எனக்கு பிடித்ததால் அதையே நான் வைத்துக் கொண்டேன். எனது பெயருக்கு பின்னால் எனது அப்பா சேகரின் பெயர் இருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டு ரைஹானா சேகர் என்றுதான் முதலில் பெயர் வைத்திருந்தேன். ஆனால் நான் ஏ.ஆர். ரைஹானாவாக இருக்க வேண்டும் என்று இசைத்துறை விரும்பியது.
ஏ.ஆர். என்ற எழுத்துக்கு விளக்கம் என்னவென்று நான் ரகுமானிடம் கேட்டேன். அதற்கு அவர் ஏ.ஆர். என்பது கடவுளின் பெயரை குறிக்கும் சொல் என்று பதில் அளித்தார். இதையடுத்து நான் ஏ.ஆர்.ரைஹானா என்று பெயர் மாற்றிக் கொண்டேன் எனகூறியுள்ளார்.
ஏ.ஆர்.ரைஹானா பிரபல இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் தாயார் என்பது கவனிக்கத்தக்கது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. ரகுமான் இசையமைத்துள்ள மற்றொரு படமான சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.