உங்க பாக்கெட்டை பதம் பார்க்கும் செங்கடல் தாக்குதல் – முழு விபரம்..!!

ஈரான் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடுக்கும் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் முயற்சியாக, இஸ்ரேலுக்குச் சொந்தமான அல்லது இஸ்ரேல் நாட்டின் நிறுவனம் இயக்கப்படும் கப்பல்களைக் குறிவைத்துச் செங்கடலில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் சர்வதேச அளவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது, உதாரணமாகப் பெல்ஜியம், ஜெர்மனியில் இருக்கும் கார் நிறுவனங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது., இங்கிலாந்தில் பிரபல ஆடை நிறுவனங்கள் புதிய கலெக்ஷன் வெளியிட முடியாமல் உள்ளது.
அமெரிக்காவில் மேரிலேண்டு நகரை சேர்ந்த நிறுவனம் எப்போது ஆசியாவில் இருந்தும், ஐரோப்பாவில் இருந்தும் மருத்துவப் பொருட்கள் எப்போது வரும் எனத் தெரியாமல் உள்ளது. இப்படிச் செங்கடலில் நடக்கும் தாக்குதல் இஸ்ரேல், ஈரான் மத்தியிலான பாதிப்பு மட்டும் அல்லாமல் சர்வதேச பிரச்சனையாக மாறியுள்ளது. இதனால் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் சரக்குக் கப்பல்கள், செங்கடலில் மற்றும் சூயிஸ் கால்வாய் பகுதியை விடுத்து ஆப்பிரிக்காவைச் சுற்றி வரவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதனால் சரக்கு போக்குவரத்து செலவுகளும், பயண நேரமும் அதிகமாகிறது.
இதன் வாயிலாகச் சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரிக்க வழிவகுத்து வருகிறது. தற்போது பெர்லின் நகரில் இருக்கும் டெஸ்லா தொழிற்சாலை இன்று முதல் பிப்ரவரி 11 வரையில் மூடப்பட்டு உள்ளது, பெல்ஜியம் நாட்டில் இருக்கும் சீனாவின் வால்வோ கார் நிறுவனம் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. ஜப்பானில் இருந்து இன்ஜின்கள் மற்றும் பிற பாகங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், ஹங்கேரியில் உள்ள சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் ஆலையில் உற்பத்தி ஒரு வாரத்திற்கு நிறுத்தப்பட்டது.
பிரிட்டன் நாட்டின் Marks and Spencer புதிய ஆடைகளை அறிமுகம் செய்வதை நிறுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் 20 சதவீத ஆடைகளும், ஐரோப்பாவுக்கு வரும் 40 சதவீத ஆடைகள், 50 சதவீத காலணிகள் அனைத்தும் செங்கடலில் வாயிலாகவே வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் காரணமாக இதன் விலை அதிகரிக்க உள்ளது. செங்கடலில் டிராஃபிகுரா என்னும் சிங்கப்பூர் நிறுவனத்தால் இயக்கப்படும் எரிபொருள் டேங்கரை கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்கியதால் எரிபொருள் சப்ளை பாதிப்பு அச்சங்கள் அதிகரித்துள்ள காரணமாகக் கச்சா எண்ணெய் விலை திங்களன்று 1% உயர்ந்ததுள்ளது.