தனது கழுத்தை தானே அரியத் துணிந்த அரிவாள் தாய நாயனார் பற்றித் தெரியுமா?
திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ளது கணமங்கலம் என்ற ஊர். இந்த ஊர் சோழ நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.
இந்த ஊரிலே தோன்றியவர் தாயனார். இவர் இறைவனுக்கு அமுது படைப்பதை தனது கடமையாகக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் உயர் தரமான அரிசியும், செங்கீரையும், மாவடுவால் தயாரிக்கப்பட்ட ஊறுகாய் எனச் சிறந்த உணவை சமைத்து, அதனை இவரும் இவரது மனைவியும் நைவேத்தியமாக எடுத்துச் சென்று, லிங்கத்தின் முன் வைத்து உண்ணுமாறு வேண்டுவர். நாள் தவறாமல் தாயனார் இதைச் செய்து வந்தார்.
இவரது பக்தியை உலகிற்கு உணர்த்த சித்தம் கொண்டார் சிவபெருமான். அதற்காக சிவபெருமான் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். இறைவனுக்கு தினமும் அமுது படைத்ததால் தாயனாரின் செல்வம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. ஆனாலும் அவர் நைவேத்தியம் படைப்பதை விடவில்லை. கூலி ஆட்களை வைத்து நெல் பயிரிட்ட தாயனார், வறுமையின் கொடுமையால் அவரே கூலி ஆட்களின் ஒருவரானார்.
ஏழையாகிய அவர் கூலிக்கு நெல் அறுக்கச் சென்றார். அவருக்குக் கூலியாகக் கிடைக்கும் செந்நெல்லை சிவபெருமானுக்கும், மீதி இருக்கும் கார்நெல்லை (தரம் குறைந்த நெல்) தனது தேவைக்கும் பயன்படுத்திக் கொள்வார். இந்தத் திருப்பணிக்கு இவரது மனைவியும் பெரும் துணையாக இருந்தார். சிவபெருமானின் திருவிளையாடலால் அந்த போகத்தில் கார்நெல் விளையவேயில்லை. அனைத்தும் செந்நெல்லாகவே வளர்ந்தன. இதனால் செந்நெல்லை ஈசனுக்குப் படைத்துவிட்டு கீரையை மட்டும் சமைத்து உண்டு வந்தனர். இவர்களின் உறுதியை மேலும் சோதிக்க விரும்பினார் சிவபிரான். அவர்கள் தோட்டத்தில் கீரைகளும் இல்லாமல் போய்விட்டன. ஆனாலும், நீரையே குடித்து அவர்கள் வாழ்ந்தனர்.
ஒரு நாள் செந்நெல்லரிசி சோறு, மாவடு ஆகியவற்றைக் கூடையில் வைத்து தலையில் சுமந்து கொண்டு செல்கிறார். பசி மயக்கத்தில் அவர் தள்ளாடிச் செல்கிறார். பசியோடும், களைப்போடும் மனைவி பின் தொடர்கிறார். ஓர் இடத்தில் தாயனார் தடுமாறி விழப் போகிறார். அவரை அவரது மனைவி பிடித்துக் கொள்கிறார். அவர் விழவில்லை என்றாலும், கூடையில் வைத்திருந்த இறைவனுக்குரிய உணவு நிலத்தில் விழுந்து சிந்தி விடுகின்றது. தாயனார், “ஐயோ! ஈசனுக்காக நான் எடுத்துச் சென்று உணவு சிந்திவிட்டதே! என் அப்பனே! என் உயிரே! இனி நான் உயிர் வாழேன்! இன்று உமக்கு உணவு தராத பாவியானேன். நான் உயிர் வாழேன்” என்று கூறி தான் எப்போதும் உடன் வைத்திருக்கும் அரிவாளால் தனது கழுத்தை தானே அரிய முயன்றார்.