வேடிக்கை பார்க்க வந்தவரை மணமகனாக நடிக்க வைத்த அதிர்ச்சி சம்பவம்.. அரசு நடத்திய இலவச திருமணத்தில் கோடிக்கணக்கில் மோசடி
உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு நடத்திய திருமணத்தில் மோசடி நடந்திருப்பதும், இதில் கோடிக்கணக்கில் பணம் சுருட்டப்பட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் 2 பேர் உள்பட 15 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி அரசு சார்பாக இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சுமார் 568 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் பங்கேற்ற அனைவரும் உண்மையான மணமக்கள் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது.
போலி கணக்கு எழுதுவதற்காக பலர் மணமகன் மற்றும் மணமகளாக நடிக்க வைக்கப்பட்டனர் என்பது தெரிய வந்துள்ளது. இலவச திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகளாக நடிப்பதற்கு அழைத்து வரப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 500 முதல் ரூ. 2000 வரை வழங்கப்பட்டதாக உள்ளூரை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக வெளியான வீடியோவில் மணமகள்கள் சிலருக்கு ஜோடி இல்லாமல் அவர்களே மாலையை அணிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரபல ஊடகத்திற்கு மணமகனாக நடிக்க வந்த இளைஞன் பேட்டி அளித்துள்ளார். அவர் திருமணத்தை பார்க்க சென்றதாகவும், அங்கே இருந்தவர்கள் மணமகனாக நடி, பணம் தருகிறோம் என்று கூறி தன்னை அமர வைத்ததாகவும் தெரிவித்தார்.
இது சம்பந்தமாக வெளியான செய்திகள், வீடியோக்கள் உள்ளிட்டவை உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலி திருமணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உத்தர பிரதேசத்தில் அரசு நடத்தும் இலவச திருமணங்களுக்காக ஜோடி ஒன்றுக்கு 51 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் 35 ஆயிரம் ரூபாய் நேரடியாக மணமகளுக்கு செல்லும். மீதமுள்ள 16 ஆயிரம் ரூபாயில், ரூபாய் 10 ஆயிரம் திருமண பொருட்கள் வாங்குவதற்காகவும், 6 ஆயிரம் ரூபாய் திருமண நிகழ்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் நூற்றுக்கணக்கான ஜோடிகளுக்கு நடத்தப்பட்ட போலி திருமணத்தில் சில கோடி ரூபாய் பணம் கையாடல் செய்யப்பட்டிருக்க கூடும் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் குற்ற செயலில் ஈடுபட்டதாக அரசு அதிகாரிகள் இரண்டு பேர் உட்பட 15 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.