அயோத்தி ராமர் கோயிலுக்கு காணிக்கையாக வந்த வெள்ளித் துடைப்பம்!

தற்போது உத்தர பிரதேசத்தில் நிலவும் குளிரையும் பொருட்படுத்தாமல், அயோத்தியில் ராமர் கோவிலில் உள்ள பால ராமரை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், ‘அகில் பாரதீய மங் சமாஜ்’ என்ற அமைப்பைச் சேர்ந்த ராம பக்தர்கள், ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு வெள்ளி துடைப்பம் ஒன்றைக் காணிக்கையாக அளித்துள்ளனர். இந்த வெள்ளி துடைப்பம் 1.751 கிலோ எடை கொண்டது. கோயிலில் கர்ப்பகிரகத்தைச் சுத்தம் செய்ய இதனை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழங்கியுள்ளனர்.

கோயில் அறக்கட்டளையின் புதிய நேர அட்டவணைப்படி, பால ராமர் சிலையின் சிருங்கார ஆரத்தி அதிகாலை 4:30 மணிக்கும், மங்கள பூஜை காலை 6:30 மணிக்கும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு, காலை 7 மணி முதல் பக்தர்கள் கோயிலுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்

இதுகுறித்து அகில பாரதிய மங் சமாஜைச் சேர்ந்த மதுகர் ராவ் தேவ்ஹரே கூறுகையில், “நாங்கள் பெதுலில் இருந்து வந்துள்ளோம். உலகமே ஜனவரி 22ஆம் தேதியை தீபாவளியாகக் கொண்டாடியது. தீபாவளியன்று துடைப்பத்தை லட்சுமி தேவியின் வடிவில் வணங்கப்படுவதால், அகில் பாரதிய மங் சமாஜ், வெள்ளி துடைப்பத்தைப் பரிசளித்துள்ளது. இந்தத் துடைப்பத்தைச் செய்து முடிக்க 11 நாட்கள் ஆனது. 1.751 கிலோ எடை கொண்ட இந்தத் துடைப்பம் 108 வெள்ளிக் குச்சிகளைக் கொண்டது. இதன் மேல் பகுதியில் வெள்ளியாலான லட்சுமி தேவியின் உருவம் உள்ளது. இந்தத் துடைப்பத்தை கர்ப்பக்கிரகத்தை சுத்தம் செய்ய பயன்படுத்த வேண்டும்…” என்றார்.

இந்நிலையில், இப்போது அயோத்தியில் நிலவும் கடும் குளிரும் ராம் லல்லாவை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களைத் தடுக்க முடியவில்லை. உயர் பாதுகாப்புக்கு மத்தியில் ராமரிடம் அருளைப் பெறுவதற்காக ஏராளமான பக்தர்கள் குளிரைத் தாங்கும் ஆடைகளை அணிந்து கொண்டு ராமர் கோவிலுக்குப் படையெடுத்து வருகின்றனர்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, உத்தரப் பிரதேசத்தில் ஜனவரி 31 வரை அடர்த்தியான மூடுபனி தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இரவு மற்றும் காலை நேரங்களில் சாலைகளில் நடந்து செல்வதற்குக்கூட சிரமமாக இருக்கும் அளவு பனிப்பொழிவு காணப்படுகிறது. ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜனவரி 22 அன்று ராமர் கோவிலில் ராம் லல்லாவின் ‘பிரான் பிரதிஷ்டா’ விழாவிற்குப் பிறகு முதல் முறையாக சனிக்கிழமையன்று கோரக்பூருக்குச் சென்றார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *