கார் பயணிகள் அதிகம் விரும்பும் சன்ரூஃப் அம்சம்… ஆர்வம் காட்டும் நிறுவனங்கள்

ஒரு காலத்தில் ஆடம்பர வசதியாக பார்க்கப்பட்ட சன்ரூஃப், இன்று காரின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறிப்போயுள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை வெறும் 7 சதவிகித கார்களே சன்ரூஃபுடன் விற்பனையாகின. ஆனால் இன்றோ விற்பனையாகும் 55 சதவிகித கார்களில் சன்ருஃப் வசதி உள்ளது. இதனால் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுட்டு, இந்தியாவில் விற்கப்படும் பாதிக்கும் மேற்பட்ட கார்களில் சன்ரூஃப் வசதியை கார் உற்பத்தியாளர்கள் வழங்கி வருகிறார்கள்.

வெப்ப மண்டல நாடான இந்தியாவில், ப்ரீமியம் ஹேட்ச்பேக், செடான், SUV என அனைத்து வகையான கார்களிலும் சன்ரூஃப் தேவை அதிகரித்துள்ளதை பார்க்க முடிகிறது. இந்தியாவின் வானிலைக்கு எப்போதும் சன்ருஃபை திறக்க முடியாத சூழல் நிலவினாலும், அதன் ஆடம்பர தோற்றமும் தனித்துவமும் மக்களிடம் பிரபலமாகியுள்ளது. காரில் சென்று கொண்டிருக்கும் போதே சன்ரூஃப் வழியாக சாலைகளை பார்ப்பது அலாதியான அனுபவத்தை கொடுப்பதோடு காரின் உட்புற அழகையும் இது அதிகப்படுத்துகிறது.

காரில் உள்ள சன்ரூஃபை நாம் அடிக்கடி திறக்காவிட்டலும் கூட, பயண அனுபவத்தில் இது அளிக்கும் கவர்ச்சியை நாம் மறுக்கவே முடியாது. மேலும் இந்தியாவில் சொந்தமாக கார் வாங்குவதே சமூக அந்தஸ்தாக பார்க்கப்படும்போது, அதுவும் சன்ரூஃப் வசதியுள்ள கார்களை வைத்திருக்கும்போது மற்றவர்களை விட அவர்கள் தனித்து தெரிகிறார்கள் எனக் கூறுகிறார் Jato Dynamics India என்ற ஆட்டோ இண்டெலிஜன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ரவி பாட்டியா.

இந்திய சந்தையில் 85 சதவிகித SUV கார்களில் சன்ரூஃப் வசதி உள்ளது. இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி நிறுவனமும் தங்களது சிறிய SUV ரக காரான பிரெஸ்ஸாவில் (Brezza) சன்ரூஃப் வசதியை சேர்த்துள்ளார்கள். பட்ஜெட் விலையில் கார் வாங்குபவர்களிடம் கூட சன்ரூஃப் மீதான மோகம் அதிகரித்துள்ளதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். வெறும் மூன்றே வருடங்களில் சன்ரூஃபுடன் வரும் ஹேட்ச்பேக் மற்றும் மல்டி பர்போஸ் வாகனங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய இரட்டிப்பாகியுள்ளது.

இதற்கிடையில், இந்திய சன்ரூஃப் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜெர்மனியைச் சேர்ந்த Webasto என்ற நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் சன்ரூஃப் தேவைகள் அதிகரித்துள்ளதால் தங்களது ஆலையை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தங்களது இரண்டாவது ஆலையை சென்னையில் திறந்துள்ள Webasto, உற்பத்தியை இரட்டிப்பாக்கும் வகையில் ரூ.1000 கோடியை முதலீடு செய்யவுள்ளது. மேலும் இந்தியாவில் பனோராமிக் சன்ரூஃப்க்கான தேவை வரும் காலங்களில் அதிகரிக்கும் என கருதுகிறது Webasto நிறுவனம்.

இந்நிலையில் ஆனந்த் குழுமத்தின் Gabriel India நிறுவனத்தோடு இணைந்து Inalfa என்ற டச்சு நிறுவனமும் இந்திய சந்தையில் நுழைந்துள்ளது. இந்நிறுவனம் வருடத்திற்கு இரண்டு லட்சம் சன்ரூஃப்களை உற்பத்தி செய்யும் ஆலையை சென்னையில் தொடங்க திட்டமிட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *