ஆயிரம் சந்தேகங்கள்: தனிநபர் கடனை முன்கூட்டியே கட்டி முடித்தால் நமது ‘கிரெடிட் ஸ்கோர்’ பாதிக்குமா?
தபால் அலுவலகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கான ஆர்.டி., திட்டத்தில், அந்த அலுவலக ஏஜன்ட் வாயிலாக கணக்கு துவங்கி இருந்தேன். தற்போது சென்னையில் இருக்கிறேன். இரண்டாம் ஆண்டு தவணையை கட்ட சென்னை தபால் அலுவலகத்துக்கு சென்றேன். அவர்கள் கோவையில் சம்பந்தப்பட்ட ஏஜன்டிடம் தான் காசோலை கொடுக்கவேண்டும் என்று கூறினார்கள். இந்த விதிமுறைக்கு மாற்று வழி இருக்கிறதா?கே.சுந்தரம், ஆர்.எஸ்.புரம், கோவை.அஞ்சல் துறையில் இணைய வங்கிச் சேவை வசதி இருக்கிறது.
ஒருமுறை சிரமப்படாமல், நீங்கள் கணக்குத் துவங்கிய அஞ்சலகத்துக்கு சென்று, இணைய வங்கிச் சேவைக்கான படிவத்தை நிரப்பிக் கொடுத்து, யூசர் ஐ.டி., பாஸ்வேர்டு வாங்கிக்கொள்ளுங்கள். அதன் பிறகு, உங்கள் இணைய சேவை இயங்கத் துவங்கியவுடன், அதோடு உங்கள் ஆர்.டி.,யை இணைத்துக்கொண்டு, ஆண்டு தவணைத் தொகையைச் செலுத்தலாம். மொபைல் பேங்கிங் வசதியும் இருக்கிறது. அதற்கும் விண்ணப் பித்து பெற்றுக்கொள்ளலாம்.
தபால் நிலையத்தில், என்னுடைய சேமிப்பு கணக்கிற்கு 12,500 ரூபாய் செலுத்தினேன். செலுத்தப்பட்ட பின், என் கணக்கிலிருந்து, ‘கேஷ் டிபாசிட் சார்ஜ்’ 25 ரூபாயும், அதற்கு ஜி.எஸ்.டி., 4.50 ரூபாயும் பிடிக்கப்பட்டிருந்தது. ஊழியரிடம் கேட்டதற்கு, ஆம், பிடிக்கப்படும் என்று கூறினார்கள். அவர்கள் பிடித்தம் செய்தது சரியா?
பி.ஆர்.சரவணன், போடிநாயக்கனுார், தேனி.சரி தான்! இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்கிலேயே இந்த விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில், சேமிப்பு கணக்கில் 10,000 ரூபாய் வரை ரொக்கம் வரவு வைப்பதற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. அதற்கு மேல் ரொக்கம் வரவு வைக்கப்படும் போது, பரிவர்த்தனை மதிப்பில் 0.50 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். குறைந்தபட்சம் ஒரு பரிவர்த்தனைக்கு 25 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான் மீண்டும் மீண்டும் சொல்லிவருகிறேன். வங்கித் துறை நமது மரபான புரிதலில் உள்ள சேவை செய்யும் துறை அல்ல. அது வணிகம். வாடிக்கையாளருக்கு ஒரு வசதியை செய்துதந்தால், அதற்கு கட்டணம் உண்டு.
‘என் கணக்கில் என் பணத்தைத் தானே போடுகிறேன்’ என்று கேட்பதில் அர்த்தமில்லை. ‘அதை வீட்டில் வைத்து பராமரிக்க முடியாததால் தானே, வங்கிக் கணக்கில் போடுகிறீர்கள்; அந்தப் பரிவர்த்தனைக்கு கட்டணம் செலுத்துங்கள்’ என்பது தான் நவீன வங்கியியல் சிந்தனை. ஒரு நிறுவனம் என் தந்தையின் மியூச்சுவல் பண்டு முதலீட்டை பராமரித்து வருகிறது. அவருக்கு தெரியாமல் இந்த நிறுவனம் பணம் ஏதாவது எடுத்துக் கொள்ள முடியுமா?
கவனமாக இருப்பது எப்படி?பெ.பொன்னம்மாள், கொளத்துார், சென்னை.உங்கள் தந்தைக்குத் தெரியாமல், மியூச்சுவல் பண்டு வினியோக நிறுவனம் எதுவும் செய்ய முடியாது. மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை மியூச்சுவல் பண்டு நிறுவனங்களிடம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று மட்டும் பாருங்கள். அவர் முதலீடு செய்துள்ள நிறுவனங்களில் இருந்து மாதம் தோறும் ஸ்டேட்மென்ட் மின்னஞ்சலில் வரும். பரிவர்த்தனை ஏதும் இருந்தால் அது குறுஞ்செய்தியாக மொபைலில் வரும்.
உங்கள் தந்தையின் கையெழுத்து இல்லாமல், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், பண்டு களின் ‘ரிடெம்ஷன்’களை ஏற்றுக் கொள்ளாது. பணத்தை எந்தக் காலத்திலும் விடுவிக்காது. பணத்தை உங்கள் தந்தையின் வங்கிக் கணக்குக்குத் தான் அனுப்பிவைக்கும். மியூச்சுவல் பண்டுகளை பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம்.
இந்தத் துறை பெருமளவு முறைப்படுத்தப்பட்டு விட்டது.தனிநபர் கடனை, முன்கூட்டியே கட்டி முடிப்பதால், கிரெடிட் ஸ்கோர் பாதிக்குமா? ஆர்.எஸ்.ருக்குமணி, பிரஸ்காலனி, கோவை. தனிநபர் கடன் என்பது, முடித்து தலைமுழுக வேண்டிய கடன். உங்கள் வளர்ச்சிக்குத் துளியும் உதவாத கடன் வகை இது.
கிரெடிட் கார்டு கடன் இன்னொரு படுகுழி. கையில் பணம் இருந்தால், திருப்பிச் செலுத்திவிட்டு வெளியே வந்துவிடுங்கள். கிரெடிட் ஸ்கோருக்கு இன்னொரு முகமும், கோணமும் உண்டு. அது எல்லோரையும் கடன்காரர்களாகத் தான் பார்க்கிறது.
துப்புள்ள கடன்காரனா, துப்பில்லாத கடன்காரனா என்பதை வரையறை செய்துவதுதான் அந்த மதிப்பீடு. நான் கடனே வேண்டாம் என்ற கட்சியைச் சேர்ந்தவன். கிரெடிட் ஸ்கோர் முக்கியமா, கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை முக்கியமா என்பதை நீங்கள் முடிவுசெய்து கொள்ளுங்கள். எனது மகனது படிப்புக்கு கல்விக்கடன் பெற விண்ணப்பித்தேன்.
வீட்டை பிணையமாக வைத்தால், ஆண்டுக்கு 7.50 லட்சம் ரூபாய் கொடுப்பதாகவும்; வீட்டை காப்பீடு செய்ய வேண்டும் என்றும் கூறினார். அதன்படி செய்து கடனை பெற்றேன். இந்நிலையில் சிலதினங்களில் எனது மகன் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார். எனது வீட்டின் மேல் செய்திருந்த காப்பீட்டு பணம் என் வங்கி கணக்குக்கு வரவும், கல்விக் கடன் மற்றும் அதுவரையிலான வட்டி ஆகியவற்றை பிடித்தம் செய்துகொண்டு மீதித் தொகையை வங்கி அதிகாரிகள் வழங்கினார்கள்.
எனது மகன் இறப்பினால் வீட்டிற்கு கிடைத்த காப்பீட்டு தொகையில், வங்கி பிடித்தம் செய்ய சட்டம் உள்ளதா? இந்த நடைமுறை சரியா?பி.கஜேந்திரன், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர்.மகனை இழந்து நிற்கும் உங்கள் ஆதங்கம் நியாயம் தான். ஆனால், வங்கியியல் அப்படி பரிதாபம் பார்ப்பதில்லை. வங்கிகளை குறைசொல்லியும் பலனில்லை.
அது அவர்கள் பணமில்லை. மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பலரிடம் இருந்து திரட்டப்பட்ட தொகை. அது லாபம் ஈட்டித் தந்தால் தான், வங்கிகளால் வட்டி கொடுக்க முடியும். இத்தகைய இடர்களை எதிர்பார்த்துத் தான், வங்கி மேலாளர் உங்கள் வீட்டை அடமானம் வைக்கச் சொல்லி, அதற்கு காப்பீடும் செய்யச் சொல்லியிருக்கிறார்.
உங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை வருவதற்கு வழி செய்திருக்கிறார். வங்கிக்கும் இழப்பு ஏற்படாமல் பாதுகாத்து உள்ளார். நீங்கள் கல்விக் கடன் வாங்கும்போதே, இத்தகைய விதிமுறைகளை ஒப்புக்கொண்டு தான் கையெழுத்து போட்டிருப்பீர்கள். அதற்கு ஏற்பவே, பணம் பிடித்தம் செய்யப்பட்டு, மீதத் தொகை உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ—மெயில்’ மற்றும் ‘வாட்ஸாப்’ வாயிலாக அனுப்பலாம். ஆயிரம் சந்தேகங்கள்தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும். ஆர்.வெங்கடேஷ், pattamvenkatesh@gmail.com ph:98410 53881