தமிழகத்தில் அமைந்த தனித்துவமான ராமர் கோயில்… ‘சின்’ முத்திரையுடன் அருளும் யோக ராமர்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் நெடுங்குணம் அருகே யோக ராமர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் சேத்துப்பட்டு – வந்தவாசி நெடுஞ்சாலையில் சேத்துப்பட்டில் இருந்து 5 கிமீ.
தூரத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள மிக தனித்துவமான ராம விக்ரஹங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு ராமர் அமர்ந்த நிலையில், வலது கையால் சின் முத்திரையைக் காட்டி மார்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். இங்கு ராமபிரான் ஹனுமான் படித்த பிரம்ம சூத்திரத்தை கேட்டுக் கொண்டு அமர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. ராமருக்குப் பக்கத்தில் லக்ஷ்மணனும் சீதையும் அருகருகே உள்ளனர்.
இவர்கள் மூவரும் சுக பிரம்ம ரிஷியின் வேண்டுகோளின்படி அவர் இலங்கையிலிருந்து திரும்பும் போது இங்கு சிறிது காலம் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. திருவண்ணாமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற யோக இராமச்சந்திர பெருமாள் திருக்கோயிலில் பெருமாள் இடது கையை இதயத்தின் மேல் வைத்தவாறு அமர்ந்துள்ளார். அவருக்கு எதிரில் அனுமன் வேத மந்திரத்தைப் படித்துக்காட்டுவது மாதிரியும் சிற்பங்கள் கண்கொள்ளா அழகுடன் திகழ்கின்றன. இத்துடன் இங்கு மிக நேர்த்தியான வாயிற்காவலர்கள் சிற்பம் அமைந்துள்ளது. இச்சந்நிதியுடன் செங்கமலவல்லி தாயார் சந்நிதி அமைந்துள்ளது.
இதன் எதிரில் அமைந்துள்ள முக மண்டபத்தில் இராமாயண , தசாவதார சிற்பங்கள், கிருஷ்ணலீலை, கிருஷ்ணதேவராயர் சிற்பமும் அமையப்பெற்றது கூடுதல் சிறப்பு. இந்தக் கோவிலில் கிருஷ்ண தேவராயருக்கு தனிச் சிற்பம் அமைந்துள்ளது முக்கியமானதாக கருதப்படுகிறது. இக்கோயிலின் அமைந்துள்ள தொங்கும் தாமரைச் சிற்பமும், ராமன் வாலி சண்டை சிற்பங்கள், கிருஷ்ணலீலை, சுக்கிரிவன் வாலி சிற்பங்கள், கிருஷ்ணதேவராயர் சிற்பம் இவை அனைத்துமே காணக் காண இன்பம். இந்த கோவில் விஜயநகர பேரரசர்கள் காலத்தில் கட்டப்பெற்றது. இங்கு அழகிய சிற்ப வேலைப்பாடும், வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்வெட்டுகளும் அமைந்துள்ளது.