ரொம்ப சின்னப் பையன்.. தயவுசெஞ்சு வாழ்க்கையை காலி பண்ணிராதீங்க.. கவுதம் கம்பீர்
இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருக்கும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து அதிகமாக புகழ்ந்து பேசி, அவர் எதிர்காலத்தை சீர்குலைத்து விட வேண்டாம் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய அணியில் இடது கை துவக்க வீரராக இருந்த ஷிகர் தவான் வயதை கருத்தில் கொண்டு அவரை நீக்கி விட்டு, இளம் அதிரடி இடது கை பேட்ஸ்மேன் ஆன ஜெய்ஸ்வாலை இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரராக தேர்வு செய்தது தேர்வுக் குழு. அவர் 6 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதம் அடித்து இருக்கிறார். அதில் ஒன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான இரட்டை சதம்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்த உடன் சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் அவரை குறித்து பலரும் பாராட்டி வந்த நிலையில் கவுதம் கம்பீர் அவரை புகழ்ந்து தள்ளி ஒரு ஹீரோவாக மாற்றி விடாதீர்கள். அவருக்கு என ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டால் அவர் தன் இயல்பான ஆட்டத்தை ஆட முடியாமல் போய்விடும் என எச்சரித்து இருக்கிறார்.
ஜெய்ஸ்வால் குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், “அந்த இளைஞரின் சாதனைக்காக நான் வாழ்த்த விரும்புகிறேன், ஆனால், அதைவிட முக்கியமாக, அந்த இளைஞனை விளையாட விடுங்கள் என்று அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன். கடந்த காலங்களில் இந்தியாவில் நாம் பார்த்த வகையில், குறிப்பாக ஊடகங்கள், அவர்களை ஹீரோக்கள் போல் காட்டி, அவர்களின் சாதனைகளை மிகைப்படுத்தி பேசும் பழக்கம் உள்ளது. மேலும், அவர்களுக்கு பட்டங்களை கொடுத்து ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார்கள்” என்று கூறினார்
மேலும், “எதிர்பார்ப்பின் அழுத்தம் அவர்களை வசமாக சிக்க வைக்கிறது, அதனால், அவர்கள் தங்கள் இயல்பான விளையாட்டை விளையாட முடியாது. எனவே, ஜெய்ஸ்வால் தனது கிரிக்கெட்டை அனுபவித்து ஆட விடுங்கள்” என்று கம்பீர் கூறினார்.