டிவியில் பார்த்து விவசாயம்.. காய்கறி சாகுபடியில் மாதம் ஒரு லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கும் பெண்
சமூக வலைதளங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு, தமிழகத்தில் பிரபலமான விளம்பரம் ஒன்று குறித்து நிச்சயமாக தெரிந்திருக்கும். மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தமிழகப் பெண் ஒருவர் அதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசும்போது, “காலையில் எழுந்ததும் 10 லிட்டர் பால் கறக்கிறது, அதன் மூலம் நிறைவான வருமானம் கிடைக்கிறது, இந்த மாடு, கன்று இதுதான் வாழ்க்கை, இதைவிட வேறென்ன வேண்டும்’’ என்று கேட்டிருப்பார். அதை மையமாக வைத்து தமிழகத்தில் எண்ணற்ற மீம்ஸ்கள் வலம் வந்துள்ளன. அந்த மீம்ஸ்கள் வைரல் ஆவதற்கு காரணம் என்னவென்றால், விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்றவையெல்லாம் பெரிய அளவுக்கு லாபம் தரக் கூடிய தொழில்கள் அல்ல என்ற கருத்து மேலோங்கியிருப்பது தான்.
அது ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும் கூட, எல்லா சூழ்நிலைகளிலும் அது பொருந்துவது கிடையாது. தெளிவான திட்டமிடல், ஈடுபாட்டுடன் கூடிய கடின உழைப்பு போன்றவை இருந்தால் நிச்சயமாக விவசாயத்திலும் வெற்றி பெற முடியும். இந்தியப் பொருளாதாரத்தில் இன்றைக்கும் மிக முக்கியமான இடத்தை விவசாயம் பெற்றுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கடந்த 2022-2023 நிதியாண்டில் இந்திய ஜிடிபியின் வளர்ச்சியில் விவசாயம் 15 சதவீதத்தை கொண்டுள்ளது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.
இந்த செய்திகளுக்கு சான்று அளிப்பதைப் போல அமைந்துள்ளது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கீதா தேவி என்ற பெண்ணின் வாழ்க்கை. தனது தோட்டத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளை வியாபாரிகள் அல்லது பொதுமக்களிடம் விற்பனை செய்வதன் மூலமாக தினசரி இவர் ரூ.5,000 வரை சம்பாதிக்கிறாராம். ஏறக்குறைய ஒன்றரை ஏக்கர் நிலம்தான் இவரிடம் இருக்கிறது. அதில் கத்திரிக்காய், பச்சை மிளகாய், புடலங்காய், தக்காளி போன்ற காய்கறிகளை விளைவிக்கிறார். இவை அனைத்தையும் மிகச் சிறப்பான முறையில் விளைய வைத்து நல்ல விலைக்கு விற்பது தான் கீதா தேவியின் வாடிக்கையாக உள்ளது.
இத்தனைக்கும் கீதா தேவி ஒன்றும் பாரம்பரிய விவசாயி கிடையாது. டிவி நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்து விவசாயத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகக் கூறுகிறார் அவர். அதிலும் பல்வேறு வகையான காய்கறிகளை பயிரிட்டால் மட்டுமே அதன் மூலம் நிறைவான லாபம் பெற முடியும் என்பதை தெரிந்து கொண்டு, நிலத்தின் ஒவ்வொரு பிரிவிலும் வெவ்வேறு வகையான காய்கறியை பயிர் செய்து வருகிறார்.
இதுகுறித்து கீதா தேவி கூறுகையில், “காலையில் காய்கறிகளை பறித்து வைத்ததும், அருகாமையில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளுக்கும் ஃபோன் செய்து காய்கறிகளின் விலை குறித்து விசாரிப்போம். எங்கே அதிக விலை கொடுக்கிறார்களோ, அங்கே கொண்டு செல்வோம். கத்திரிக்காய் பயிர் செய்யத்தான் அதிக செலவு ஆகிறது. தினசரி அதற்கு மட்டுமே ரூ.500 வரை செலவாகிறது. எனினும், அதன் விற்பனை விலை, நம் முதலீட்டை ஈடு செய்கிறது. ஒட்டுமொத்தமாக அனைத்து காய்கறிகளும் தினசரி ரூ.3000 முதல் ரூ.5000 வரையிலான விலையில் விற்பனை ஆகிறது.
தற்போது தக்காளி, வெண்டை, கத்திரிக்காய் ஆகிய காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. அதிலும் தக்காளி கிலோவுக்கு ரூ.40க்கு மேல் விற்பனை ஆகின்றது’’ என்று தெரிவித்தார்.