கணவரை பழிவாங்க 11 வயது மகனை பெல்ட்டால் நெரித்து கொலை செய்த பெண்! கதறி அழுத தந்தை
அமெரிக்காவில் தனது மகனை பெல்ட்டைக் கொண்டு, கழுத்தை நெரித்து கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கழுத்தை நெரித்து கொலை
பென்சில்வேனியாவைச் சேர்ந்த தம்பதி டேனியல் ஒயிட்ஹெட் – ரூத் டிரைன்சோ. இவர்களது 11 வயது மகன் மேத்யூ 6ஆம் வகுப்பு படித்து வந்தார்.
குடும்பத்தில் பொருளாதார சிக்கல் நிலவியதால், டிரைன்சோ தனது கணவரை பழிவாங்க நினைத்துள்ளார். இதற்காக அவர் தனது மகனை கொல்ல முடிவெடுத்திருக்கிறார்.
இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த மகன் மேத்யூவை, பெல்ட் கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் டிரைன்சோ.
அச்சமயம் அவரது கணவர் டேனியல் வேறொரு அறையில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். மகனை கொன்ற பின்னர் டிரைன்சோ காரில் கடற்கரைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் மேத்யூ இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த டேனியல் பொலிசாரை அழைத்துள்ளார். இதனையடுத்து டிரைன்சோ முதல் நிலை குற்றவாளி என அடையாளம் காணப்பட்டார்.
அவரை கைது செய்த பொலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குடும்பத்தின் நிதிப் பிரச்சனைகளில் தனது மகன் வளர விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
தந்தை சாட்சியம்
நீதிமன்ற விசாரணையில் சிறுவனின் தந்தை டேனியல் சாட்சியம் அளித்தார். அவர் கூறியபோது, ‘அவன் படுக்கையில் முகம் குப்புறக் கிடப்பதை நான் பார்த்தேன். நான் கத்தினேன், அவன் சிறந்த பையன். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான்’ என கண்ணீருடன் தெரிவித்தார்.
டிரைன்சோவின் வழக்கறிஞர்கள், அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டதால் இந்த கொலையை செய்ததாக வாதிட்டனர். ஆனால் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள், டிரைன்சோ தனது மகனைக் கொன்றது தவறு என்பதை நன்கு அறிந்திருந்தார் என்றும், அவர் பழிவாங்கும் நோக்கத்தில் செயல்பட்டார், அவருக்கு மனநோய் அல்ல என்றும் வாதிட்டனர்.
வாதங்களை கேட்ட நீதிபதி டிரைன்சோவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஆனால், இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய போவதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.