லொட்டரிச்சீட்டு வாங்கியதையே மறந்துவிட்ட பெண்: கணவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி…

அமெரிக்காவில் லொட்டரிச்சீட்டு ஒன்றை வாங்கிய பெண்ணொருவர், தான் லொட்டரிச்சீட்டு வாங்கியதையே மறந்துவிட்டார்.
பர்சிலிருந்த லொட்டரிச்சீட்டு
பெயர் வெளியிட விரும்பாத அந்தப் பெண், பர்சில் எதையோ தேடும்போது, அவரது கையில் அவர் சில மாதங்களுக்கு முன்பு வாங்கிய லொட்டரிச்சீட்டு கிடைத்துள்ளது.
கணவரை அழைத்து அந்த லொட்டரிச்சீட்டுக்கு ஏதாவது பரிசு விழுந்துள்ளதா என்று பார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் அவர்.
கணவரும் அந்தச் சீட்டுக்கு ஏதாவது பரிசு கிடைத்துள்ளதா என்று பார்க்க, பெரிய தொகை ஒன்று அதற்கு பரிசாக கிடைத்துள்ளது தெரியவர, நம்பாமல் லொட்டரி வாங்கிய கடைக்கே சென்று விசாரித்திருக்கிறார் அவர். அப்போதுதான் அந்தச் சீட்டுக்கு ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்துள்ளது அவருக்கு உறுதியாகத் தெரிந்துள்ளது.
நம்ப மறுத்த மனைவி
அந்தக் கணவர் தன் மனைவியிடம் எப்போதும் குறும்பு செய்யும் குணம் கொண்டவராம். ஆகவே, அவர் வந்து தன் மனைவியிடம் அவர் வாங்கிய லொட்டரிச்சீட்டுக்கு ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்துள்ளதாகக் கூற, வழக்கம்போல தன் கணவர் தன்னிடம் குறும்பு செய்வதாக நினைத்தாராம் அந்தப் பெண்.
பின்னர் தனக்கு உண்மையாகவே லொட்டரியில் ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்தது தெரியவந்ததும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார் அவர்.
தங்கள் வீடு அடமானத்திலிருப்பதாகத் தெரிவிக்கும் அந்தப் பெண், முதலில் வீட்டை மீட்க முடிவு செய்துள்ளார். அத்துடன், விலங்குகள் நல விரும்பியான அவர், விலங்குகள் மீட்பு அமைப்பொன்றிற்கு கொஞ்சம் பணத்தை நன்கொடையாக கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.