மரணத்துக்குப் பின் ஒலிக்கும் பெண் ஒருவரின் துயரக் குரல்: அரசுக்கு விடுத்துள்ள அவசர கோரிக்கை
பிரித்தானிய அரசின் சட்டங்கள் சாதகமாக இருந்திருந்தால், நான் தனிமையில் வேறொரு நாட்டிற்குச் சென்று என் உயிரை பிரியும் நிலைமை ஏற்பட்டிருக்காது என்கிறார் சுவிட்சர்லாந்தில் மருத்துவர்கள் உதவியுடன் உயிரை மாய்த்துக்கொண்ட பிரித்தானிய பெண் ஒருவர்.
மரணத்துக்குப் பின் ஒலிக்கும் பெண் ஒருவரின் குரல்
ஆம், இந்த வீடியோவை நீங்கள் பார்க்கும்போது, நான் உயிருடன் இருக்கமாட்டேன் என்று கூறும் அந்தப் பெண்ணின் பெயர், பவுலா மாரா (Paola Marra, 53).
லண்டனைச் சேர்ந்த பவுலா, நேற்று முன்தினம், அதாவது, புதன்கிழமையன்று, சுவிட்சர்லாந்திலுள்ள, மருத்துவர்கள் உதவியுடன் உயிரை மாய்த்துக்கொள்ளும் டிக்னிட்டாஸ் என்னும் கிளினிக்கில் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கடுமையான வலியால் அவதியுற்றுவந்த பவுலா, பிரித்தானியாவில் மருத்துவர்கள் உதவியுடன் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ள சட்டம் அனுமதிக்காததால், தன்னந்தனியாக சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்டார்.
பிரித்தானிய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை
தனக்கு ஏராளம் நண்பர்கள் இருந்தும், தன்னந்தனியாக சுவிட்சர்லாந்துக்குப் பயணித்ததாக கூறியுள்ள பவுலா, அப்படி தன் நண்பர்கள் யாராவது என்னுடன் வந்தால், அவர்கள் தேவையில்லாத சட்டச் சிக்கல்களில் சிக்கொள்ளலாம் என அஞ்சியே, தான் தனிமையாக சுவிட்சர்லாந்துக்கு புறப்பட்டதாகக் கூறியுள்ளார்.
பிரித்தானிய சட்டங்கள் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ள அனுமதித்திருந்தால், என் நண்பர்களுடன் இன்னும் கொஞ்ச நேரம் நான் என் நேரத்தை செலவிட முடிந்திருக்கும். ஆனால், தான் தன்னந்தனியாக சுவிட்சர்லாந்துக்குச் செல்லும் நிலை உருவாகிவிட்டது என்று கூறியுள்ளார் பவுலா.
தான் உயிரை மாய்த்துக்கொள்ளும் முன், பதிவு செய்த வீடியோவில் அவர் இப்படி குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார் பவுலா. அந்தக் கடிதத்தில், செத்துக்கொண்டிருக்கும் மக்களின் குரல்களுக்கு செவிசாய்க்குமாறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை வலியுறுத்தியுள்ள பவுலா, உடனடியாக இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்துமாறும் பிரித்தானிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.