ஆம் ஆத்மி, திரிணாமூல் தனித்து போட்டி: இறுதியில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் – சச்சின் பைலட்!
மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக அம்மாநில முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். தொகுதி பங்கீடு பேசுவார்த்தையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக தனித்து போட்டியிடும் முடிவை மம்தா பானர்ஜி எடுத்துள்ளதாக தெரிகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தையின்போது, மேற்குவங்கத்தின் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் வெறும் 2 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க மம்தா பானர்ஜி முன்வந்துள்ளார். ஆனால், இதனை ஏற்க காங்கிரஸ் கட்சி மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால், ஏற்பட்ட விரிசலால் தனித்து போட்டியிடும் முடிவை மம்தா பானர்ஜி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மேற்குவங்க மாநிலம் வரும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை குறித்து தங்களுக்கு தெரிவிக்கவில்லை எனவும் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதேசமயம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இந்தியா கூட்டணியில் தான் உள்ளது என தெளிவுபடுத்தியுள்ள மம்தா பானர்ஜி, மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது பற்றி முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் தனித்து போட்டி என அறிவித்த சில மணி நேரங்களிலேயே, இந்தியா கூட்டணியின் மற்றொரு பெரிய கட்சியான ஆம் ஆத்மி பஞ்சாப் மாநிலத்தில் தனித்து போட்டி என அறிவித்துள்ளது.
பஞ்சாபில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி பஞ்சாப் மாநில ஒருங்கிணைப்பாளருமான பகவந்த் மன் அறிவித்துள்ளார். ஆனால், டெல்லியில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணிக்கு இன்னும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் தனித்து போட்டியிடும் திட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தொகுதி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கட்சிகளான ஆம் ஆத்மி, திரிணாமூல், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உரசல் போக்கு நிலவுவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், திரிணாமூல், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் நிலவும் பிரச்சினைகள் அனைத்தும் இறுதியில் தீர்க்கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இறுதியில் இந்தியா கூட்டணியின் அனைத்து தலைவர்களும் அமர்ந்து பேசி அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும்.” என்றார்.
மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், “கூட்டணி தொடர்பாக நான் எதுவும் கூறவில்லை. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை நாளை கூச் பெஹார் வரவுள்ளது. அதனை வரவேற்க நான் செல்கிறேன். கூட்டணி குறித்து என்னிடம் எந்த தகவலும் இல்லை. யார் கருத்து தெரிவித்தாரோ அவரிடம் கூட்டணி பற்றி கேளுங்கள்.” என்றார்.
முன்னதாக, அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு அம்மாநில ஆளும் பாஜக அரசு தொடர் இடையூறுகள் ஏற்படுத்து வருவது பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட், “ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்ரா அசாமில் நுழைந்த நாள் முதல், அம்மாநில காவல்துறை, அரசு நிர்வாகம், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் வேண்டுமென்றே யாத்திரையில் தடைகளை உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர். ராகுல் காந்தியையும், அவரது வாகன பேரணியை மிரட்டுவதற்காக அரசு ஆதரவுடன் வன்முறையில் ஈடுபடுவது மாநில அரசுக்கு பொருத்தமற்றது.” என தெரிவித்தார்.