“ஆம் ஆத்மி எம்எல்ஏ.,க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி” – டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்எல்ஏ.,க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாகவும், அணி மாறுவதற்கு அவர்களுக்கு தலா ரூ.25 கோடி வழங்குவதாக பாஜக கூறியதாகவும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘ஆம் ஆத்மி எம்எல்ஏ.,க்களுக்கு பாஜகவினர் மிரட்டல் விடுத்துள்ளனர். பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடலில் டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கேஜ்ரிவால் விரைவில் கைது செய்யப்படுவார் என பாஜகவினர் தெரிவித்துள்ளளது இடம்பெற்றுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

அந்த நீண்ட இந்திப் பதிவில் கேஜ்ரிவால், “சமீபத்தில் அவர்கள் (பாஜகவினர்) எங்களுடைய டெல்லி எம்எல்ஏ.,க்கள் 7 பேரை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, இன்னும் சில நாட்களில் நாங்கள் கேஜ்ரிவாலை கைது செய்து விடுவோம். அதன் பின்னர் எம்எல்ஏ.,க்களை பிரிப்போம். 21 எம்எல்ஏ.,க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. மற்றவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பின்னர் டெல்லியில் இருக்கும் ஆம் ஆத்மி அரசைக் கவிழ்ப்போம். நீங்களும் வரலாம். ரூ. 25 கோடி வழங்கப்படும். பாஜக சார்பில் தேர்தலிலும் போட்டியிடலாம் என்று கூறியுள்ளனர்.

21 எம்எல்ஏ.,க்களுடன் தொடர்பு கொண்டதாக பாஜக கூறினாலும், எங்களுக்கு கிடைத்த தகவலின் படி அவர்கள் எங்களின் 7 எம்எல்ஏ.,க்களைத் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அணி மாற மறுத்துவிட்டனர். இதன் பொருள் என்னவென்றால், ஊழல் விசாரணைக்காக அவர்களால் என்னைக் கைது செய்ய முயலவில்லை. இப்போது, டெல்லி ஆம் ஆத்மி அரசை கவிழ்க்கவே சதி செய்கிறார்கள். கடந்த 9 ஆண்டுகளில் எங்கள் அரசை கவிழ்க்க அவர்கள் பல சதிகளை திட்டமிட்டுள்ளனர். ஆனால் எதிலும் அவர்களால் வெற்றி பெற இயலவில்லை. கடவுளும் மக்களும் எங்களை எப்போதும் ஆதரிக்கிறார்கள். எங்களுடைய எம்எல்ஏ.,கள் வலுவாகவும் ஒற்றுமையாகவும் இருக்கின்றனர். இந்த முறையும் அவர்கள் தங்களின் முயற்சியில் தோல்வியைத் தழுவுவார்கள்.

டெல்லியின் மக்களுக்கு நாங்கள் எவ்வளவு செய்துள்ளோம் என்று பாஜகவுக்கும் தெரியும். அவர்கள் பல தடைகளை உருவாக்கிய போதிலும் நாங்கள் வெகுவாக சாதித்துள்ளோம். டெல்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சியை மிகவும் நேசிக்கிறார்கள். தேர்தல் களத்தில் ஆம் ஆத்மியை வெல்வது அவர்களின் அதிகாரத்தில் இல்லை. அதனால் போலியான மதுபான ஊழல் வழக்கை உருவாக்கி எங்களைக் கைது செய்து அரசைக் கவிழ்க்க சதி செய்கின்றனர்”.என்று தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *