500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் வறுமையில் வாடிய நடிகர் குடும்பம்… உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா…
500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தபோதிலும் நன்கு அறியப்பட்ட நடிகரின் குடும்பம் வறுமையில் வாடியது. இதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உதவி செய்த சம்பவம் தற்போது கவனம் பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவை பொருத்தளவில் சிலர் ஏராளமான படங்களில் நடித்தாலும் காலப்போக்கில் காணாமல் போய் விடுவார்கள். அல்லது குறிப்பிடும் வகையில் சம்பாதிக்காமல் அவர்களது குடும்பமே வறுமையில் வாடக் கூடிய சூழலை பார்க்க முடியும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் 500க்கும் அதிகமான படங்களில் நடித்தவர்தான் பசி நாராயணன்.
சிவகாசியை சேர்ந்த இவர் தனது 15 ஆவது வயது முதல் நடிக்க தொடங்கினார். இவர் பசி என்ற படத்தில் அறிமுகம் ஆனதால் அவரை பசி நாராயணன் என்று அழைக்கப்பட்டார். 1960 முதல் 1990 கால கட்டங்கள் வரையில் பசி நாராயணன் நடித்திருந்தார்.
குறிப்பாக கவுண்டமணி – செந்திலுடன் இவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. சூரியன் படத்தில் வரும் கவுண்டமணி டெல்லிக்கு போன் செய்யும் காமெடியில், போன் வயர் பிஞ்சு ஒரு வாரம் ஆகுது என்ற வசனத்திற்கு, பசி நாராயணன் கொடுத்த ரியாக்சன் இன்றைக்கும் மீம்ஸ்களில் வலம் வருகிறது. ரஜினி தொடங்கி விஜய் வரையில் இவர் இணைந்த நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை.
ஏராளமான படங்களில் இவர் நடித்தபோதும் இவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அத்துடன் இவரது குடும்பமும் வறுமையில் வாடி வந்தது. 1998 ஆம் ஆண்டு பசி நாராயணன் உடல் நலக் குறைவால் காலமானார்.
இந்நிலையில் அவரது குடும்பத்தின் வறுமை சூழலை அறிந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கியதுடன் மாதம் ரூ. 8,125 கிடைக்கவும் வழி செய்தார். இதுகுறித்த தகவல்கள் திரைத்துறையினர் மத்தியிலும் ரசிகர்களிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.