Actor Rajini: ஒவ்வொரு வருஷமும் வருவேன்.. உற்சாகப் பேட்டி கொடுத்த சூப்பர்ஸ்டார்!
சென்னை: அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு இன்றைய தினம் கும்பாபிஷேக விழா மிக பிரம்மாண்டமான அளவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் திரைத்துறை மற்றும் விளையாட்டு பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் பங்கேற்ற நிலையில், அயோத்தியே இன்றைய தினம் விழாக்கோலம் பூண்டது. நகரம் முழுவதும் வண்ண விளக்குகளாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில் கோலிவுட்டின் நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், கங்கணா ரனாவத் உள்ளிட்டவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக நேற்றைய தினமே நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் அயோத்தி சென்றடைந்தார். இந்நிலையில் இன்றைய தினம் அவருக்கு முதல் வரிசையில் உட்கார இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவருக்கு அருகில் சச்சின் டெண்டுல்கர், முகேஷ் அம்பானி உள்ளிட்டவர்கள் அமர்ந்திருந்ததையும் பார்க்க முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து உற்சாகம் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், இந்த நாள் வரலாற்று சிறப்புமிக்க தினம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த கொண்டாட்டத்தில் தனக்கு பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில்: அயோத்தியில் 500 ஆண்டுகால காத்திருப்பிற்கு பலனாக இன்றைய தினம் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சர்வதேச அளவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ராம்சரண் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்றைய தினம் நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதா ரஜினிகாந்துடன் புறப்பட்டு சென்றார். வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வது குறித்து ரஜினிகாந்த் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
நடிகர் ரஜினி பங்கேற்பு: நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டவர்களுக்கு முதல் வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. தன்னுடைய மனைவி லதா ரஜினிகாந்திற்கும் முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்படுமா என்று ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் கேட்டதையும் பார்க்க முடிந்தது. ஒரு கட்டத்தில் ரஜினி மற்றும் அவரது மனைவி லதா ரஜினி இருவரையும் இணைத்து சச்சின் டெண்டுல்கர் புகைப்படம் எடுத்துக் கொடுத்ததையும் தொடர்ந்து லதா ரஜினிகாந்த் -சச்சின் டெண்டுல்கர் இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதையும் பார்க்க முடிந்தது.