“நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராததுதான் வருத்தம்” லதா ரஜினிகாந்த் வேதனை!
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராததுதான் வருத்தம் அளிப்பதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார். ரஜினியை தான் தலைவராகத் தான் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா இயக்கிய கோச்சடையான் திரைப்படம் வெளியானது. மீடியா ஒன் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்காக, தயாரிப்பாளர்கள் ஜெயக்குமார் மற்றும் முரளி மனோகர் ஆகியோர் ஆட் பீரோ என்ற நிறுவனத்திடம் கடன் பெற்றிருந்தனர். அந்த கடனுக்கு நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையெழுத்திட்டு இருந்தார்.
இந்த நிலையில் ஒப்பந்தம்படி தயாரிப்பாளர்கள் செயல்படவில்லை என ஆட் பீரோ நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இதற்கான வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. புகாரின் அடிப்படையில் லதா ரஜினிகாந்த் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்ட போது, தன் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி லதா ரஜினிகாந்த் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மூன்று வழக்குகளை ரத்து செய்த நீதிமன்றம், ஒரு வழக்கை மட்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
அந்த வழக்கையும் ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணையில், லதா ரஜினிகாந்த் மீதான விசாரணையை பெங்களூரு நீதிமன்றமே மேற்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனால், பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தீவிரமடைந்தது. இந்த வழக்கில் நேற்று ஆஜரான லதா ரஜினிகாந்த், சென்னை திரும்பியதும் செய்தியாளர்களை சந்தித்தார். கோச்சடையான் படத்திற்கு வாங்கிய கடன் திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், தன் பெயரை வேண்டுமென்றே தொடர்புப்படுத்தி வருவதாகவும் கூறினார்.
ஒப்பந்தத்தை மாற்றி யாரோ அனுப்பிய கடிதம் ஒன்றை கர்நாடக நீதிமன்றத்தில் கொடுத்தாகவும், அதில் இருக்கும் கையெழுத்து தன்னுடையது இல்லை என்பதை தடவியல் துறையினரும் உறுதி செய்துள்ளதாக லதா ரஜினிகாந்த் கூறினார். பிரபலமாக உள்ளவர்களை துன்புறுத்தும் நோக்கில் ஆட் பீரோ நிறுவனம் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
அதேபோல் தங்களிடம் மறைமுகமாக பணம் கேட்பதாகவும் லதா ரஜினிகாந்த் கூறினார். நடிகர் ரஜினிகாந்துக்கு நியாயம் என்ன என்று தெரியும் என்றும், அவர் தனக்கு முழுமையான ஆதரவு தந்திருப்பதாகவும் கூறினார். அத்துடன் Ad-Bureau நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இதுபோன்ற சர்ச்சைகளால் தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்பது தவறு என்றும், அரசியலுக்கு வரவில்லை என அவர் அறிவித்ததால், தான் மிகவும் வருத்தப்பட்டதாகவும் கூறினார். மேலும், தங்களுக்கே இப்படி ஒரு சூழல் இருப்பதால், சாதாரண மக்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும் என்பது தெரியவில்லை என்றும் லதா ரஜினிகாந்த் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.