நடிகை ஜெயப்பிரதா ஒரு தலைமறைவு குற்றவாளி.., உடனே கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
நடிகை ஜெயப்பிரதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
என்ன பிரச்சனை?
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் 300 -க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் ஜெயப்பிரதா. இவர் நடிப்பையும் தாண்டி அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர்.
1990 -ம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தெலுங்கு தேசக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பின், அந்த கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்.
அப்போது தான் 2004 -ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றார். இதன் பிறகு 2019 -ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.
இதனைத்தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக நடிகை ஜெயப்பிரதா மீது 2019- ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆனால், இந்த வழக்கில் ஜெயப்பிரதா ஆஜராகாமல் இருந்தார். இந்த வழக்கானது ராம்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவருக்கு, ஆஜராகும்படி பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
உடனே கைது செய்க
இதனால், நடிகை ஜெயப்பிரதாவை தலைமறைவு குற்றவாளி என்று அறிவித்து பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், அவரை உடனடியாக கைது செய்து வரும் மார்ச் 6 -ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி பொலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.