குஜராத்தில் 2 லட்சம் கோடி முதலீடு செய்யும் அதானி குழுமம்.. தமிழ்நாட்டை விட 5 மடங்கு அதிகம்..!!
குஜராத் மாநிலத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு இன்று துவங்கியது, ஜனவரி 10 முதல் 12 வரை என 3 நாள் நடக்கும் இந்த மாபெரும் கூட்டத்தில் உள்நாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் என படையெடுத்து வந்து முதலீடு செய்து வருகின்றனர்.பிரதமரின் சொந்த மாநிலம் என்பதால் வைப்ரென்ட் குஜராத் குளோபல் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, இன்று முழுக்க இக்கூட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துரையாட உள்ளார்.
பல தலைவர்களை நேரில் சந்தித்துப் பேச உள்ளார். இந்த நிலையில் குஜராத் மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு உருவான அதானி குழுமம் இம்மாநிலத்தில் கிரீன் எனர்ஜி மற்றும் புதுப்பிக்கத்தக்க எனர்ஜி துறைகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்ய அதானி குழுமம் திட்டமிட்டு உள்ளதாக அதன் தலைவர் கௌதம் அதானி புதன்கிழமை அதிர்வு குஜராத் உச்சி மாநாட்டில் தெரிவித்தார்.இவருடைய அறிவிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது, தமிழ்நாட்டு முதலீட்டாளர் மாநாட்டில் 42,768 கோடி ரூபாய் என்ற அதிகளவிலான முதலீடு செய்த குழுமத்தில் ஒன்றான அதானி குழுமம், குஜராத்தில் சராசரியாக வருடத்திற்கு 40000 கோடி ரூபாயை அடுத்த 5 ஆண்டுகளுக்கு என மொத்தம் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.அதானி குழுமத்தின் இந்த 2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் குஜராத் மாநிலத்தில் சுமார் 1 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று கௌதம் அதானி கூறினார்.மேலும், கடந்த வைப்ரென்ட் குஜராத் குளோபல் உச்சி மாநாட்டில் அதானி குழுமம் ரூ.55,000 கோடி முதலீடு செய்ய உறுதியளிக்கப்பட்ட நிலையில், இதில் அதானி குழுமம் 50,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளது என்றார்.குஜராத்-க்கு 2 மெகா திட்டங்களைத் தூக்கி கொடுத்த டாடா.. செமிகண்டக்டர் திட்டம் தமிழ்நாட்டுக்கு இல்லையா..? அதானி குழுமம் தற்போது கட்ச் பகுதியில் கிரீன் எனர்ஜி பூங்காவை 25 சதுர கிமீ பரப்பளவில் 30 ஜிகாவாட் திறனுடன் உருவாக்கி வருகிறது என்றும், இது விண்வெளியில் இருந்தும் தெரியும் வரையில் மிகவும் பிரம்மாண்டமாகக் கட்டுப்பட்டு வருவதாகக் கௌதம் அதானி கூறினார்.மேலும் குஜராத் குளோபல் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்ட நிலையில் அவரைப் பாராட்டும் விதமாகக் கௌதம் அதானி 2014 முதல், இந்தியா ஜிடிபியில் 185 சதவீத வளர்ச்சியையும், தனிநபர் வருமானத்தில் 165 சதவீத வளர்ச்சியையும் எட்டியுள்ளது, இது புவிசார் அரசியல் மற்றும் தொற்றுநோய் தொடர்பான சவால்களுக்கு மத்தியில் பதிவான மிகப்பெரிய வளர்ச்சி என்றும் அதானி கூறினார்.