அதானி-க்கு அடுத்தது இவங்க தான்.. என்னா வேகம்.. ரூ.65000 கோடி முதலீடு, 3000 ஏக்கர் மெகா திட்டம்..!!

பிரிட்டன், ஜப்பான் என அடுத்தடுத்து உலக நாடுகள் ரெசிஷனுக்குள் மூழ்கினாலும், இந்தியாவின் பொருளாதாரம், வர்த்தகம், உற்பத்தி தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் உள்ளது. இதற்கு ஏற்றார் போல் இந்தியாவில் இருக்கும் முன்னணி வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்கள் அடுத்தடுத்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
இந்தியாவில் ரிலையன்ஸ், அதானி, டாடா குழுமங்களைத் தாண்டி கடந்த 3 வருடத்தில் தனது வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்து வரும் நிறுவனங்களில் முன்னோடியாக உள்ளது JSW குழுமம். சில நாட்களுக்கு முன்பு தான் கார் தொழிற்சாலைக்காகப் பெரும் தொகை முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த மெகா முதலீடு வந்துள்ளது.
JSW குழுமம் சுமார் 65,000 கோடி முதலீட்டில் ஒடிசாவின் ஜகத்சிங்பூரில் எஃகு ஆலை , மின் உற்பத்தி நிலையம், துறைமுக வசதி மற்றும் சிமென்ட் ஆலையை அமைக்க உள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த முதலீடு ஒடிசா மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் மிகப்பெரிய ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.
JSW குழுமம் புதிதாக அமைக்க உள்ள எஃகு ஆலை வருடத்திற்குச் சுமார் 13.2 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்யும் திறன் கொண்டது மற்றும் 30,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து JSW குழுமம் உருவாக்கும் துறைமுகம் மற்றும் ஜெட்டி திட்டம் மூலம் வருடம் 52 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் எனத் தெரிகிறது. மேலும் சிமென்ட் ஆலை 10 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி செய்ய முடியும், அதே நேரத்தில் இரும்பு தாது-வின் ஸ்லரி போக்குவரத்து அமைப்பு ஆண்டுக்கு 30 மில்லியன் டன்களைக் கையாளும் திறன் கொண்டிருக்கும்.
ஒடிசாவின் தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (IDCO) JSW குழுமத்தின் ரூ.65,000 கோடி முதலீட்டுத் திட்டத்திற்காக 2,958 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்துள்ளது. இந்த 2958 ஏக்கர் மொத்த நிலத்தில் 30 சதவீத நிலத்தைக் காடுகள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்படும் என்று ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் தெரிவித்துள்ளது.
கொரியா நாட்டின் மிகப்பெரிய ஸ்டீல் நிறுவனமான போஸ்கோ நிறுவனம் சுமார் 52,000 கோடி முதலீட்டில் 12 மில்லியன் டன் எஃகு ஆலையை அமைக்கத் திட்டமிட்டது, ஒடிசா அரசு இந்த நிலத்தைக் கொரியா நிறுவனத்திற்காக 2005ல் ஒதுக்கப்பட்டது.
ஆனால் இந்தத் திட்டத்திற்கது உள்ளூர் மக்கள் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, போஸ்கோவை 2017 இல் திரும்பப் பெறும்படி கட்டாயப்படுத்தியதைத் தொடர்ந்து திட்டம் தோல்வியடைந்தது. இதேபோல் தேசிய பசுமை தீர்ப்பாயம் போஸ்கோ நிறுவனம் ஸ்டீல் பிளான்ட் அமைக்கும் உரிமத்தையும் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.