ஐநாக்ஸ் உடன் அதானி ஒப்பந்தம்.. இது வேறலெவல் திட்டமாச்சே..!!
இந்தியாவில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைத்து மாற்று எரிசக்திகளை கொண்டு வருவதில் பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன, இதற்கு மத்திய அரசும் அதிகளவில் ஊக்கப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு எனப்படும் எல்என்ஜி சார்ந்த தொழில்நுட்பத்தில் கவனத்தை அதிகரித்துள்ளது அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் நிறுவனம். இதற்காக அதானி நிறுவனம் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.
புதிய ஒப்பந்தம்: அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் (ATGL) மற்றும் ஐனாக்ஸ் இந்தியா லிமிடெட் (INOXCVA), ஆகியவை இணைந்து கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் படி ATGL மற்றும் INOXCVA நாட்டில் LNG கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் LCNG உபகரணங்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் இணைந்து செயல்படுவது என ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம் மூலம் இரு நிறுவனங்களும் preferred partner என்ற அந்தஸ்தை பெற்றுள்ளன.
ஒப்பந்தத்தின் பலன்: திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு பயன்படுத்தும் வாகனங்களுக்கு இருக்கும் பெரும் சவால், அதற்கான எரிவாயு நிலையங்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை என்பது தான்.
இந்த ஒப்பந்தம் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் LNG மற்றும் LCNG நிலையங்களை நிறுவுதல், தொலைதூரத்தில் எல்என்ஜி நிலையங்களை அமைத்தல், போக்குவரத்து எரிபொருளாக LNGஐ மாற்றுதல், எல்என்ஜி லாஜிஸ்டிக்ஸ், இதோடு சிறிய அளவிலான திரவமாக்கப்பட்ட ஹைட்ரஜென் தீர்வுகள் ஆகியவற்றுக்கு இரு நிறுவனங்களும் முன்னுரிமை அளிக்கப்பட்டு பணியாற்ற உள்ளன.
கார்பன் உமிழ்வு: இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ் பி மங்கலானி, உலகம் முழுவதும் காற்று மாசுபாடு மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் சரக்குகளை கொண்டு செல்லும் கனரக வாகனங்களின் அதிகரிப்பு ஆகியவற்றால் காற்று மாசு குறைவதை தடுக்க இணைந்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.
நீண்ட தூரம் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் தற்போது டீசலில் இயக்கும் பேருந்துகளை படிப்படியாக LNGக்கு மாற்றுவதே தங்களின் நோக்கம், இதனால் கரியமில வாயு உமிழ்வு 30% குறையும் என தெரிவித்துள்ளார். மேலும் LNG நிலையங்களை அமைத்தால் அத்தகைய வாகனங்களை இயக்குபவர்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும் என கூறியுள்ளார்.
INOXCVA நிறுவனத்தின் நிர்வாகம் சாராத இயக்குநர் சித்தார்த் ஜெயின், நமது பொருளாதாரம் அதிவேகத்தில் பயணிக்க தயாராகி வருகிறது, இந்த மாற்றம் நிலையான முறையில் நடைபெறுவதை உறுதி செய்வதில் நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என கூறியுள்ளார். இதற்காக திரவ எரிவாயு மிகவும் பயன்படும் என உறுதி அளித்துள்ளார்.