அதானி நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்த ஆளில்லா உளவு விமானம் ‘திருஷ்டி-10 ஸ்டார்லைனர்

ஹைதராபாத்: இந்திய கடற்படையின் உளவு பணிக்காக ஆளில்லா கண்காணிப்பு விமானம் தயாரிக்கும் ஆர்டர் அதானி டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

இந்நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்த முதல் ‘திருஷ்டி 10 ஸ்டார்லைனர்’ என்ற ஆளில்லா உளவு விமானத்தை கடற்படையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் உள்ள அதானி ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் நேற்று நடந்தது.

இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார் கலந்துகொண்டு ‘திருஷ்டி’ உளவு விமானத்தை தொடங்கி வைத்தார். இந்த உளவு விமானம் போர்பந்தர் எடுத்துச் செல்லப்பட்டு கடல்சார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இந்த விமானத்தில் நவீன கண்காணிப்பு கருவிகள் உள்ளன. 36 மணி நேரம் பறக்கும் திறனுள்ளது. 450 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்லும், அனைத்து கால நிலைகளிலும் வானில் பறக்கும் திறனுள்ளது என அதானி ஏரோஸ்பேஸ் மற்றும் டிபன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணைத்தலைவரும், கவுதம் அதானியின் மகனுமான ஜீத் அதானி கூறியதாவது: சமீபத்திய புவிசார் அரசியல் நிகழ்வுகள், நுண்ணறிவு, தகவல் செயலாக்க திறன், ஆளில்லா கருவிகளின் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலான தகவல் மற்றும் அறிவாற்றல் திறன்களின் ஒருங்கிணைப்பை வலியுறுத்தியுள்ளன.

இந்திய எல்லைப் பகுதிகளின் உளவு மற்றும் கண்காணிப்புக்கு, அதானி நிறுவனம் இந்திய பாதுகாப்பு படைகளின் தேவையை நிறைவேற்ற உதவும். மேலும், ஏற்றுமதிக்கான உலக அரங்கில் இந்தியாவை இடம்பெறச் செய்யும். இந்திய கடற்படை மற்றும் அதன் தேவைகளுக்கு சேவை செய்வதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதானி டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜ்வன்ஷி கூறுகையில், ”திருஷ்டி 10 ஸ்டார்லைனர் ஆளில்லா விமானம் தொடங்கி வைத்திருப்பது, தற்சார்பு மற்றும் உள்நாட்டில் நவீன தொழில்நுட்பத்தை உருவாக்கும் பயணத்தில் வரலாற்று சிறப்புமிக்க தருணம்.இந்த நிகழ்வு, ஆளில்லா விமான தொழில்நுட்பத்தில், இந்தியாவின் தற்சார்பை நோக்கிய பயணத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம்.

இந்திய கடற்படைக்கு குறித்த நேரத்தில் ஆளில்லா கண்காணிப்பு விமானத்தை விநியோகித்துள்ளது எங்களின் வலுவான தர மேலாண்மை நடவடிக்கைக்கு சான்றாக உள்ளது. இந்த ஆளில்லாவிமான தயாரிப்பில் 70 சதவீதத்துக்கும் மேல் உள்நாட்டு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *