உங்க வீரர்களுக்கு ஸ்பின் ஆடத் தெரியாதுல்ல அப்ப பேசாதீங்க.. வெளிநாட்டு மீடியாவை விளாசிய கவாஸ்கர்

கேப் டவுன் : இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வெளிநாட்டு பிட்ச்களில் பேட்டிங் செய்யத் தெரியாது என பிற நாட்டு ஊடகங்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கடும் பதிலடி கொடுத்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டில், மோசமான பிட்ச்சில் தென்னாப்பிரிக்க அணியை விட இந்திய அணி சிறப்பாக ஆடிய நிலையில் அவர் வெளிநாட்டு ஊடகங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் மோசமாக ஆடியது. முதல் இன்னிங்க்ஸில் 245 ரன்களும், இரண்டாவது இன்னிங்க்ஸில் 131 ரன்களும் மட்டுமே எடுத்து ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அப்போது இந்திய வீரர்களுக்கு வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பேட்டிங் செய்ய தெரியாது என்ற விமர்சனம் எழுந்தது.

அடுத்து கேப் டவுனில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் பிட்ச் மிக மோசமாக இருந்தது. வேகப் பந்துவீச்சுக்கு அந்த ஆடுகளம் பெரிய அளவில் ஒத்துழைப்பு அளித்தது. தென்னாப்பிரிக்க வீரர்களே பேட்டிங் செய்ய தடுமாறினர். ஆனால், இந்திய அணி ஓரளவு சமாளித்து பேட்டிங் செய்தது, போட்டியில் வெற்றியும் பெற்றது. இந்திய அணிக்கு அழுத்தம் கொடுக்க கடினமான பிட்ச்சை தயார் செய்து அதில் தென்னாப்பிரிக்க அணியே வீழ்ந்தது.

இந்த நிலையில் இது பற்றி பேசிய கவாஸ்கர், பொதுவாக இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் வேகப் பந்துவீச்சில், பவுன்ஸ் ஆகும் பிட்ச்களில் ஆடத் தெரியாதவர்கள் என்று தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் எழுதி வருகின்றன. வேகப் பந்துவீச்சில் பேட்டிங் செய்யத் தெரியவில்லை என்றால் அவர்கள் பேட்ஸ்மேன்இல்லை என்கிறார்கள். அதே போல, இந்தியாவில் வெளிநாட்டு வீரர்களால் ஸ்பின் பந்துவீச்சில் ஆடத் தெரியவில்லை என்றால் அவர்களும் பேட்ஸ்மேன்களே இல்லை என வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்திய ஊடகங்கள் அப்படி விமர்சனம் செய்வதில்லை என காட்டமாக பேசி இருக்கிறார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *