Aditya Narayan: பயங்கரமான கோபக்காரரா இருப்பாரோ… ரசிகரின் செல்போனை வீசியெறிந்த பிரபலம்…
சத்தீஸ்கர்: கடந்த சில மாதஙகளாகவே இசை நிகழ்ச்சிகளில் சில சர்ச்சையான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் அதிகளவில் ரசிகர்கள் கூடியது.
சில தினங்களுக்கு முன்னர் இலங்கையில் பாடகர் ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் தமன்னாவுக்காக அதிக கூட்டம் கூடியதால் பலர் காயமடைந்தனர். இப்போது இந்தி பாடகர் ஆதித்ய நாராயண் ரசிகரின் செல்போனை பிடுங்கி வீசியெறிந்தது பெரும் புயலை கிளப்பியுள்ளது.
ரசிகரின் செல்போனை வீசியெறிந்த ஆதித்ய நாராயண்
பிரபல பின்னணிப் பாடகர் உதித் நாராயண் தமிழ், இந்தி மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். அவரது மகனான ஆதித்ய நாராயணும் பிரபல பாடகராக வலம் வருகிறார். இந்தியில் பல பாடல்களை பாடியுள்ள அவர், நடிகராகவும் காணப்படுகிறார். இவரின் இசை நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு காணப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சத்தீஸ்கரில் உள்ள தனியார் கல்லூரியில் ஆதித்ய நாராயணின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அப்போது அவர் ஷாருக்கானின் டான் படத்தில் இருந்து ‘ஆஜ் கீ ராத்’ என்ற பாடலை பாடிக் கொண்டிருந்தார். ஓபன் ஸ்டேஜ்ஜில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆதித்ய நாராயண் பாடிய போது ரசிகர்கள் அவரை சூழ்ந்து நின்று வீடியோ எடுத்தனர்.
அப்போது திடீரென கோபமான ஆதித்ய நாராயண் ரசிகரின் செல்போனை பிடுங்கி கூட்டத்திற்குள் வீசியெறிந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனாலும் அவர் கருமமே கண்ணாக தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தார். ஆதித்ய நாராயணின் இந்த செயலை அங்கிருந்த ரசிகர்கள் வீடியோவாக எடுத்து வைரலாக்கி வருகின்றனர். இதனைப் பார்த்த பலரும் ஆதித்ய நாராயணை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ரசிகர்களை இதுபோன்ற தரக்குறைவாக நடத்துவதா, ஆதித்ய நாராயணுக்கு எங்கிருந்து இவ்வளவு கோபம் வந்தது என வெளுத்து வாங்கியுள்ளனர். ஆதித்ய நாராயண் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது முதன்முறை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. 2017ம் ஆண்டு ராய்ப்பூர் விமான நிலையத்தில் அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து சர்ச்சையில் சிக்கினார். அப்போதும் ஆதித்ய நாராயண் மீது கடுமையான விமர்சனங்கள் வந்தன.
அதனைத் தொடர்ந்து தற்போது இசை நிகழ்ச்சியில் ரசிகரின் செல்போனை பிடுங்கி வீசியெறிந்துள்ளார். தொடர்ந்து இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கும் ஆதித்ய நாராயணன் பின்னர் விளக்கம் கொடுப்பதோ மன்னிப்புக் கேட்பதோ கூட இல்லை எனவும் சொல்லப்படுகிறது.