தமிழகத்தில் வரும் 4-ம் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்..!
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
போதைப் பொருட்களைத் தடுப்பதற்காக இயங்குகின்ற டெல்லியினுடைய சிறப்பு போலீஸ் அமைப்பும் இணைந்து நடத்திய சோதனையில், டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதோடு, இந்த கும்பலுடைய தலைவனாக செயல்பட்டவர் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக் தான் என்ற செய்தியும், அவரை காவல் துறை தேடுகிறது என்ற செய்தியும் வந்த போது தமிழக மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
இது தமிழகத்திற்கு ஏற்பட்டு உள்ள மிகப் பெரிய தலைகுனிவாகும். எனவே, தி.மு.க. அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் – ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதற்கும், போதைப் பொருள் கடத்தலால் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கு காரணமான தி.மு.க. அரசைக் கண்டித்து, அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி, மாணவர் அணி ஆகிய அமைப்புகளின் சார்பில், வருகிற 4-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் வருவாய் மாவட்டங்களில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை, வருவாய் மாவட்டங்களில் கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.