ஜனாதிபதி புடினை அடுத்து… மீண்டும் கைதாணை பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
உக்ரைனில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக ரஷ்ய உயர்மட்டத் தளபதிகளுக்கு கைதாணை பிறப்பித்துள்ளது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்.
இரண்டாவது சுற்று கைதாணை
ரஷ்யாவின் Sergei Kobylash மற்றும் Viktor Sokolov ஆகிய இரு தளபதிகளும் தற்போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பட்டியலில் இடம்பெற்றவர்கள்.
உக்ரைன் போர் தொடர்பான ரஷ்ய அதிகாரிகளுக்கான இரண்டாவது சுற்று கைதாணை இதுவாகும். முதற்பட்டியலில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடம்பெற்றிருந்தார். ஆனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ரஷ்யா இதுவரை அங்கீகரிக்கவில்லை.
இதனால் கைதாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் தங்கள் மீதான குற்றவியல் விசாரணையை எதிர்கொள்வார்கள் என்பதும் சந்தேகம் என்றே கூறப்படுகிறது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவிக்கையில், தற்போது கைதாணை பிறப்பிக்கப்பட்ட இரு தளபதிகளுக்கும் எதிராக போதிய ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
பாதிப்பும் மிக அதிகம்
மேலும் சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் அக்டோபர் 2022 மற்றும் மார்ச் 2023 க்கு இடையில் நடந்ததாக ஐசிசி தெரிவித்துள்ளது. மட்டுமின்றி, இந்த தாக்குதல்கள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவித்ததாகவும், அதன் பாதிப்பும் மிக அதிகம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான எந்த கட்டமைப்பின் மீதும் தாக்குதல் முன்னெடுக்கவில்லை என்றே ரஷ்யா மறுத்து வருகிறது. இதனிடையே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நடவடிக்கையை உக்ரைன் ஜனாதிபதி வரவேற்றுள்ளார்.