அர்ஜுனா விருது வாங்கிய பின்.. வருத்தத்தில் முகமது ஷமி.. பதறிய பிசிசிஐ.. எதிர்பார்க்காத திருப்பம்
மும்பை : இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி இரு நாட்கள் முன்பு மத்திய அரசின் அர்ஜுனா விருது பெற்றார். இந்த நிலையில், இந்திய அணியில் தன் எதிர்காலம் குறித்து தனக்கு தெரியவில்லை என அவர் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
குறிப்பாக 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருக்கு பின் ஷமி இதுவரை எந்த போட்டியிலும் ஆடவில்லை. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆட இருந்த அவர் காலில் இருந்த உள்காயம் காரணமாக அதில் இருந்து மீண்டு வர சிகிச்சை எடுத்து வருகிறார்.
அதே சமயம் அடுத்து 2024 டி20 உலகக்கோப்பை தொடர் வர உள்ள நிலையில் தனக்கு டி20 அணியில் இடம் கிடைக்குமா? என தெரியவில்லை. தேர்வுக் குழு தன்னை தேர்வு செய்வது குறித்து அறிய விரும்புவதாக பேசினார். தன்னை டெஸ்ட் அணி பந்துவீச்சாளராக மட்டுமே பார்க்கிறார்கள் என்ற வருத்தத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார்.
தற்போது ரோஹித் சர்மா, விராட் கோலி நீண்ட இடைவெளிக்கு பின் எந்த கேள்வியும் இன்றி டி20 அணியில் இடம் பிடித்த நிலையில் முகமது ஷமியின் பேச்சு கவனத்தை ஈர்த்து இருக்கிறது. ரோஹித், கோலிக்கு ஒரு நியாயம், தனக்கு ஒரு நியாயமா? என்பது போன்றே இருக்கிறது ஷமியின் கேள்வி.
இந்த நிலையில், பிசிசிஐ பதறிப் போய் அவருடன் விரைவில் தேர்வுக் குழுவை பேசுமாறு கூறி இருக்கிறது. விருது வாங்கிய நேரத்தில் ஷமி பிசிசிஐ-ஐ குற்றம் சுமத்தும் வகையில் பேசி இருப்பதால் அதை உடனே சரி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பிசிசிஐ உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது காயத்தில் இருந்து மீண்டு வரும் முகமது ஷமி, 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கிறார்.